வில்லுப்பாட்டு
வில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை)(Villu Paatu) என்பது தென்தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைகளில் தனிச்சிறப்புடன் திகழும் தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, வில்லுக்குடம், தாளம், வீசுகோல், கட்டை என்பனவாகும்.[1]
வில்லுப்பாட்டின் தோற்றம்
[தொகு]வில்லுப்பாட்டின் தோற்றம் குறித்த காலத்தை வரையறுத்துக் கூற முடியவில்லை. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்வதற்கும் பயன்பட்டது.
‘’’வில்லுப்பாட்டு’’’ எப்படி உருவானது என்பதற்கு செவிவழிக் கதை ஒன்று உண்டு. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். பல விலங்குகளை வேட்டையாடினார். மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் கலக்கம். அமைச்சரிடம் ‘’இந்த உயிர்களை இப்படிக் கொல்லுகிறோமே... நமக்கு சந்தோஷம், அவற்றுக்கோ துன்பம். மானைக் கொன்ற பின், அதன் குட்டி எப்படித் தவிக்கிறது பார்த்தீர்களா?’’ என்றார். ‘’சரி, இதற்கெல்லாம் பரிகாரம் உண்டா?’’ ‘’உண்டு ராஜா... இறைவன் மீது மனமுருகப் பாடி பாவ மன்னிப்புக் கோருங்கள். இசை ஒன்றுக்குத் தான் இசைவான்’’ என்றார் அமைச்சர். உடனே காட்டிலேயே கச்சேரி நடத்த முடிவானது. ஆனால் பக்க வாத்தியங்கள் இல்லை. கொண்டு வந்த பொருட்களை இசைக்கருவிகளாக்கினர். வில்லைத் தரையில் வைத்து அம்பால் தட்டி இசை எழுப்பினார் மன்னர். அப்படி தட்டும் போது வில் சரிவர நிற்காததால் தண்ணீர் கொண்டு போயிருந்த மண் குடத்தைக் கட்டித் தட்டினார். டும் டும் என்று நாதம் பிறந்துவிட்டது. ராஜா பாடத் துவங்கும் முன், ‘தந்தனத்தோம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் அமைச்சர். மன்னர் பாடும் போது, ஆமோதிக்க வேண்டாமா? அதனால் மன்னரின் உதவியாட்கள் ‘ஆமாம்’ போட ஆரம்பித்தனர். அந்தப் பழக்கம் வில்லுப்பாட்டில் இன்னும் தொடர்கிறது.[2]
வில்லுப்பாட்டின் அமைப்பு
[தொகு]வில்லுப்பாட்டின் கட்டமைப்பைப் பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாக வகுக்கலாம்:
காப்பு விருத்தம்
[தொகு]இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும். அந்த முறையில் வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது.
பெரும்பாலும் இது விருத்தமாக அமையும்.
வருபொருள் உரைத்தல்
[தொகு]குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும்.
இதனை நுதலிப்பாடுதல் எனவும் கூறுவர். இது பாடலாக அமையப்பெறும்.
குருவடி பாடுதல்
[தொகு]தனக்கு ஆசிரியனாக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாக உதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.
அவையடக்கம்
[தொகு]கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச் சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும்.
பிழை நேருமிடத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதி அமையப்பெறும்.
நாட்டு வளம்
[தொகு]கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.
கதைக்கூறு
[தொகு]நாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும். கதையின் தலைவன், தலைவியரின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.
வாழிபாடுதல்
[தொகு]இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது.
வில்லுப்பாட்டுக் கலைஞர்கள்
[தொகு]- தோவாளை சுந்தரம் பிள்ளை
- என். எஸ். கிருஷ்ணன்
- குலதெய்வம் இராஜகோபால்
- யாழ்ப்பாணம் சின்னமணி
- உடப்பு பெரி. சோமாஸ்கந்தர்
- சுப்பு ஆறுமுகம்
- திருப்பூங்குடி ஆறுமுகம்
- லடிஸ் வீரமணி
- நாச்சிமார்கோயிலடி இராஜன்
- திருநெல்வேலி புலிக்குட்டிப்புலவர்
- முத்துசாமி தேவர், கோவில்பட்டி.
- சோக்கல்லோ சண்முகநாதன்
உசாத்துணை
[தொகு]- ↑ https://www.tirunelveli.today/ta/villuppattu/
- ↑ மங்கையர் மலர்:டிசம்பர் 1-15, 2014. பக்.47
- ↑ Alastair Dick (1984). The New Grove Dictionary of Musical Instruments. Volume 3.
- தோட்டுக்காரி, முனைவர் வ. அலமேலு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1995
பனுவல்
[தொகு]- Manohar Laxman Varadpande (1992). History of Indian theatre, Volume 2. p. 125. ISBN 9788170172789.
- Source
வெளி இணைப்பு
[தொகு]• கன்னங்குளம் லெவிஞ்சுபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமிய கலைஞர்பட்டியல்
- Villu Paatu பரணிடப்பட்டது 2022-02-10 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
- வில் பிறந்த கதை - இராஜம் புஷ்பவனம் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் (நூலகம் திட்டம்)
- யாழ்ப்பாணம் சின்னமணியின் வில்லுப்பாட்டு இணையத்தில்
- வில்லிசைக் கலைஞர் சின்னமணி