வனவிலங்குகள் காப்பகம்
வனவிலங்குகள் காப்பகம் என்பது, தாவரங்கள், வன விலங்குகளின் பாதுகாப்புக்காகக் குறித்து ஒதுக்கிய ஒரு புவிப் பரப்பைக் குறிக்கும்.[1] இவற்றை விலங்குகள் சரணாலயம் என்றும் அழைப்பதுண்டு. இவை பொதுவாக அரசின் சட்டங்களால் உருவாக்கப்படுவன ஆகும்.[2] இங்கு வனத்துறை அலுவலர்களின் அனுமதியின்றி எந்தவொரு விலங்கையும் பிடிக்கவோ, கொல்லவோ தடை செய்யப்பட்டுள்ளது.
வன விலங்கு பாதுகாப்பு
[தொகு]இப்பகுதிக்குள் வாழும் விலங்குகள் வேட்டையாடுதல் முதலிய மனித நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன. அழிந்துவரும் விலங்குகளைக் காப்பதற்காகவும் சிறப்புக் காப்பகங்கள் அமைக்கப்படுவது உண்டு. மனிதன் தனது சொந்த தேவைகளுக்காக விலங்குகளை அழிப்பதில் முனைந்து பல அபூர்வ விலங்குகளையும் உயிரினங்களையும் அவற்றின் சுவடுகள் தெரியாதபடி அழித்து விடுகிறான். பெருமைக்காகவும் விலங்குப் பொருள்களான தந்தம், தோல், இறைச்சி, பற்கள், தேன், அரக்கு, பட்டு போன்றவற்றை விற்பனை செய்யவும் வேட்டையாடினர். மென்மயிர் தோலுக்காக எலிகளும் நீர் நாய்களும் வேட்டையாடப்படுகின்றன. தோலுக்காக பலவகை மான்கள் பாம்புகள், புலிகள் போன்றவை வேட்டையாடப்படுகின்றன. கஸ்தூரிக்காக கஸ்தூரி மான்களும்,தந்தத்திற்காக ஆண் யானைகளும் , மருந்திற்காக முதலைகள், கருமந்திகள் போன்றவையும் வேட்டையாடபபடுகின்றன. சிங்கம், காட்டுக் கழுதை, பாக்டீரிய ஒட்டகம், காட்டெருமை, கடமா(யாக்), சிறுத்தைப் புலி போன்றவையும் வேட்டையாடப்படுகின்றன.
அழிவை நோக்கியுள்ள உயிரினங்கள்
[தொகு]கடந்த 2000 ஆண்டுகளில் 106 விலங்கினங்களும் 140 பறவையினங்களும் அழிந்துள்ளன. தற்போதைய கணக்கெடுப்பின் படி மேலும் சுமார் 300 இனங்கள் அழிவின் வாயிலில் உள்ளன.
பெங்குவின், புள்ளிமான், கஸ்தூரி மான், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், யானை சிங்கம், கரடி, புலி, காட்டெருமை, முதலை, பாம்பு, மயில், சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் போன்றவற்றில் சில சிற்றினங்கள்(Species) அடியோடு அற்றுப் போகும் நிலையில் உள்ளன.
பறவைகள் காப்பகங்கள்
[தொகு]புலம்பெயர்ந்து வரும் பறவைகள் பெருமளவில் தங்கும் இடங்களில் சிறப்பாகப் பறவைகள் காப்பகங்கள் அமைக்கப்படுகின்றன. இறைச்சிக்காக பறவைகளும் வேட்டையாடப்படுகின்றன.
வனவிலங்கு பாதுகாப்பின் முக்கியத்துவம்
[தொகு]- இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க வனவிலங்கு பாதுகாப்பு அவசியம்.
- மரங்கள் தாவரங்கள் பெருக்கத்திற்கும் தட்ப வெப்ப நிலை சமன்பாட்டுக்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம்.
- இயற்கை வளங்கள் மூலம் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித் தருபவை விலங்குகளும் ,மரங்களும் தாவரங்களுமே.
- இவ்வாறான இடங்கள் சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்றன. இதனால், உலகின் பல நாடுகளிலும் அமைந்துள்ள வனவிலங்குகள் காப்பகங்கள் பல, புகழ் பெற்ற சுற்றுலா தலங்களாகவும் உள்ளன.
- விலங்கினம் பற்றிய கல்வியறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் வனவிலங்குப் பாதுகாப்பிடங்கள் உதவி புரிகின்ற்ன.
அருகிவரும் சில அபூர்வ இனங்கள் அழிவிலிருந்து மீண்டும் புத்துயிர் பெறுகின்றன.
பாதுகாப்புச் சட்டம்
[தொகு]உலகிலேயே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை முதன் முதலில் ஏற்படுத்திய நாடு இந்தியா தான். 1887-ல் இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் உருவாயிற்று. சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் விலங்குகள் வாழ ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மொத்தக் காட்டுப் பகுதியில் 8% ஒதுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆண்டு தோறும் அக்டோபர் முதல் வாரம் வன உயிரினப் பாதுகாப்பு வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "nature reserve" (in ஆங்கிலம்). Retrieved 2025-03-31.
- ↑ Francoise Burhenne-Guilmin (2011). Guidelines for Protected Areas Legislation. IUCN. p. 147. ISBN 9782831712451.