உள்ளடக்கத்துக்குச் செல்

இராபர்ட்டு கால்டுவெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராபர்ட் கால்டுவெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராபர்ட்டு கால்டுவெல்
பிறப்புஇராபர்ட்டு கால்டுவெல்
7 மே 1814
அயர்லாந்து
இறப்பு28 ஆகத்து 1891
கொடைக்கானல், பழனி மலைகள், தமிழ்நாடு
கல்லறைஇடையான்குடி, திருநெல்வேலி மாவட்டம்
தேசியம்பிரித்தானியர்
பணிசமயப்பரப்பாளர், மொழியியலாளர்
அறியப்படுவதுதென்னிந்திய பிஷப்

இராபர்டு கால்டுவெல் (Robert Caldwell) (7 மே 1814–28 ஆகத்து 1891) ஒரு கிருத்துவச் சமயப்பரப்பாளர் ஆவார். தன் 24-ஆம் அகவையில் இந்தியா வந்தடைந்த அவர், விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார். இதுவே, பின்னர், அவரைத் தென்னிந்திய மொழிகளுக்கான ஒப்பிலக்கண நூலொன்றை எழுத வைத்தது. அவருடைய நூலில், பழைய ஏற்பாட்டிலுள்ள எபிரேயத்திலும், பழங்கிரேக்கத்திலும், தொலெமி குறிப்பிட்டுள்ள இடங்களிலும் திராவிடச் சொற்கள் உள்ளதாகப் பரிந்துரைத்தார்.[1] திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்.

இளமைக் காலம்

[தொகு]

இவர் 1814-ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் இராபர்ட்டு கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார்.தமிழ் மொழி .[2]

மொழியியல் ஆய்வுகள்

[தொகு]

1841-இல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே."[3]

குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன் முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர். குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும், நில வழியாகவும் பெலுசித்தான், மெசபடோமியா முதலிய வடமேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர். – அறிஞர் கால்டுவெல்

வரலாற்று ஆய்வுகள்

[தொகு]

திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெரும் பேறாக "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட இராபர்ட்டு எரிக்கு ஃபிரிக்கென்பர்க்கு (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.[4]

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்

[தொகு]
  • நற்கருணை தியான மாலை (1853)
  • தாமரைத் தடாகம் (1871)
  • ஞான ஸ்நானம் (கட்டுரை)
  • நற்கருணை (கட்டுரை)
  • பரதகண்ட புராதனம்

கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்

[தொகு]
  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)
  • திருநெல்வேலி அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)
  • தின்னவேலி (திருநெல்வேலி) சாணர்கள்: அவர்களின் மதம், மற்றும் ஒரு சாதியாக அவர்களது நெறிகள் மற்றும் குணங்கள்; அவர்களிடையே கிறிஸ்தவம் பரவுவதற்கு உள்ள வசதிகள் மற்றும் தடைகள் பற்றிய சிறப்புக் குறிப்புகளுடன் - ஒரு வரைவு (The Tinnevelly Shanars: A Sketch of – Their Religion, and Their Moral Condition and Characteristics, as a Cast; with Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them, 1849)[5][6]
  • திருநெல்வேலி உயர் வகுப்பு மற்றும் உயர் சாதியினரிடையே கிறிஸ்தவ மதமற்றத்திற்கு செய்யப்பட்ட பணிகள் (Evangelistic Work amongst the Higher Classes and Castes in Tinnevelly. Rev. Dr. Caldwell’s Third Journal. [1876.])
  • மதத்தின் உள்ளிருக்கும் கோட்டை (The Inner Citadel of Religion. S.P.C.K.: London, [1879.])
  • காப்பாற்றப் படாதவர்களின் அணிவகுப்பு [மதத்தின் வழியில்.] (The March of the Unsaved. [A religious tract.] G. Stoneman: London, [1896.])
  • திருநெல்வேலியில் வேல்ஸ் இளவரசர் மற்றும் "டெலாகே சாலையிலிருந்து இடையான்குடி வரை" (The Prince of Wales in Tinnevelly, and "From Delahay Street to Edeyengoody.". London : S.P.C.K., 1876.)
  • குடுமியின் மீதான அவதானிப்புகள் (Observations on the Kudumi. J. J. Craen: [Madras?] 1867.)
  • இந்தியாவில் மிசனரிப் பள்ளிகளில் கிறிஸ்தவரல்லாத மாணவர்களுக்கு மதக்கட்டளைகளை தெரிவிப்பதை நிறுத்திவைத்தல் தொடர்பாக- மதறாஸ் பங்குத்தந்தைக்கு ஒரு கடிதம் (On reserve in communicating religious instruction to non- Christians in mission schools in India: a letter to the Right Reverend the Lord Bishop of Madras. Madras : S.P.C.K. Press, 1879.)
  • கிறிஸ்தவத்துக்கு இந்து மத்ததுடன் உள்ள தொடர்பு (The Relation of Christianity to Hinduism. R. Clay, Sons, & Taylor: London, [1885.])
  • திருநெல்வேலி கிறிஸ்தவ மிசனின் ஆரம்ப கால வரலாற்றுப் பதிவுகள் (Records of the Early History of the Tinnevelly Mission, etc. Higginbotham & Co.: Madras, 1881.)
  • மூன்று பாதை வழிகாட்டிகள் (The Three Way-marks. Christian Vernacular Education Society: Madras, 1860.)

குறிப்புகள்

[தொகு]
  1. Robert Caldwell (1856). A Comparative Grammar of the Dravidian Or South-Indian Family of Languages. Asian Educational Services (Reprint of 1913 3rd-edition revised by Reverend J.L. Wyatt and T Ramakrishna Pillai). pp. 88–105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0117-8.
  2. குமாரதாஸ்
  3. Thomas Trautmann, 'Inventing the History of South India', in David Ali (ed.), Invoking the Past: The Uses of History in South Asia, New Delhi: Oxford University Press, 2002, p. 41. Also cited in Kumaradoss, Robert Caldwell, p. 147.
  4. Robert Eric Frykenberg, Robert Caldwell, cited in Kumaradoss, Robert Caldwell, p. 156, note 58.
  5. https://books.google.co.in/books?id=RUZWmAEACAAJ&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false
  6. https://catalog.hathitrust.org/Record/100850066
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்டு_கால்டுவெல்&oldid=4034828" இலிருந்து மீள்விக்கப்பட்டது