பருவப் பெயர்ச்சிக் காற்று
பருவப்பெயர்ச்சிக் காற்று (monsoon) என்பது நிலத்திற்கும் கடலிற்கும் இடையேயுள்ள வெப்பநிலை வேறுபாட்டினால் பருவந்தோறும் உருவாகும் காற்றுப்பெயர்ச்சி ஆகும். உலகின் பல பகுதிகளில் இது ஏற்பட்டாலும் அவற்றில் முதன்மையாகக் கருதப்படுவது ஆசிய பருவப்பெயர்ச்சியே.[1] இது பருவந்தோறும் மழையைக் கொணர்வதால் பருவமழை எனவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இது, அரபிக் கடல் மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளில் வீசும் காற்றுகளைக் குறிக்கவே பயன்பட்டது. இந்தியாவுக்குத் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும்காற்று, தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று (south west monsoon) என்றும், வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று, வடகிழக்குப் பருவமழை (north east monsoon)என்றும் குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மழையைக் கொண்டு வருகின்றன. சில பகுதிகள் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களின்போதும் மழையைப் பெற, தமிழ் நாட்டின் பல பகுதிகள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட வேறு சில பகுதிகள் ஒரு பருவத்தில் மட்டுமே மழையைப் பெறுகின்றன.
பருவமழை ஏற்படக் காரணம்
[தொகு]
சூரியனைப் பொறுத்து புவியின் சுழற்சியச்சு சாய்ந்திருப்பதனால் பருவப்பெயர்ச்சிக் காற்று (பருவக்காற்று) தூண்டப்படுகிறது.[2] நிலமும் கடலும் கதிரவனின் கதிர்களுக்குட்டாலும் நிலம் வேகமாக சூடடைகிறது; நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் அதிகம் ஆதலால், கடல் எளிதில் சூடடைவதில்லை. அதாவது, நிலத்திற்கு மேலுள்ள வளி அதிக வெப்பநிலையிலும் கடலின் மேலிருக்கும் வளி குறைந்த வெப்பநிலையிலும் காணப்படுகின்றன. இதுவே நிலத்தின் மேலிருக்கும் வளியழுத்தம் குறைவதற்கும் கடலின் மேல்பகுதி வளியழுத்தம் அதிகமாவதற்கும் காரணமாகின்றது. அதிகவழுத்தப் பகுதியிலிருந்து தாழ்வழுத்தப் பகுதிக்கு காற்று பெயர்கின்றது. இதுவே பருவக்காற்று உருவாகக் காரணமாகும். முதன்மைக் கட்டுரைகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு] |