நாரண. துரைக்கண்ணன்
நாரண. துரைக்கண்ணன் (ஆகஸ்ட் 24, 1906 - ஜூலை 22, 1996) தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஜீவா என்ற புனை பெயரில் எழுதியவர். சிறுகதைகள், புதினங்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் எழுதியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]துரைக்கண்ணன் 1906 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் க. வே. நாராயணசாமி, அலர்மேல் மங்கை ஆகியோருக்குப் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் நடராசன். ஆனால், அவர்கள் "துரைக்கண்ணு' என்று செல்லமாக அழைத்தனர். எழுத்துலகில் நாரண துரைக்கண்ணன் என்ற பெயர் நிலைபெற்றது. 1932 ஆம் ஆண்டு, தன் 25வது வயதில் மீனாம்பாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 1982 ஆம் ஆண்டில் மனைவி காலமானார்.
இவரது இளமைக்கல்வி திண்ணைப் பள்ளியிலும், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் அமைந்தது. மறைமலை அடிகள் போன்றவர்களிடம் தமிழ் பயின்றார். மெய்ப்பு சரிபார்க்கும் பணியில் பல அச்சகங்களில் பணியாற்றினார். மெய்ப்பு சரி பார்ப்பதில் வல்லவரானார்.
வருவாயைப் பெருக்க சில காலம் அடிசன் கம்பெனியில் பணியாற்றினார். நாரண துரைக்கண்ணனின் முதல் கட்டுரையே "சரஸ்வதி பூஜை' என்கிற பெயரில் 1924-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இதழில் வெளியானது.
திரு.நாரணதுரைக்கண்ணர் நலவாழ்வு நிதி
[தொகு]பிற்காலத்தில், தமிழ் எழுத்துலகால் இவர் மறக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், 1973 ஆம் ஆண்டு சமயம் திருமயிலை சீனிவாச சாஸ்திரி அரங்கில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டத்தில் நாரண. துரைக்கண்ணன் தமது பேச்சில் தந்த தன்னிலை விளக்கம், பார்வையாளர்களுக்கு அவரது பொருளாதாரச் சூழலைப் புரிய வைத்தது. அதன்பின் ஒளவை நடராஜன் வழிகாட்டுதலில் ’திரு.நாரணதுரைக்கண்ணர் நலவாழ்வு நிதி’ எனும் நிதி திரட்டி அவரை வறுமைச் சூழலில் இருந்து விடுவிக்க முடிவுசெய்தனர். அதற்கு முன்னரே பலர் அவ்வாறு நிதி திரட்ட முயன்று பாதியிலேயே கை விட்ட நிலைமையில் ’அன்னை கலை, இலக்கிய நற்பணி மன்றம்’ சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவில் அமைந்திருந்த நாரண துரைக்கண்ணர் இல்லம் சென்று அவரிடம் அவருக்கு உதவக்கூடியோர் என்று அவர் கருதுவோரின் பெயர்ப்பட்டியல் பெற்று ஆர்வத்துடன் நிதி திரட்ட முயன்றது. அம்முயற்சியில் எழுத்தாளரான நாரண. துரைக்கண்ணன் வெள்ளை உள்ளத்துடன் இரும்புப்பெட்டிக்கும் இதயத்திற்கும் சம்பந்தம் இல்லை எனும் நடைமுறை யதார்த்தம் புரியாமல் பலரின் பெயரைத் தந்திருந்ததை உணர்ந்த அக்குழு தாங்கள் பெற்ற பல கசப்பான அனுபவங்களையும் நாரண. துரைக்கண்ணருக்குத் தெரியாமல் மறைத்து, சேர்த்த நிதியை 23.12.1973 அன்று கோகலே மண்டபத்தில் நடந்த விழாவில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி மூலம் நாரண. துரைக்கண்ணரிடம் ஒப்படைத்தது.[1] வள்ளலார் மற்றும் மகாகவி பாரதியின் நூல்களை ஆர்வத்துடன் கற்றார்.
பத்திரிகையாளராக அறிமுகம்
[தொகு]பரலி சு. நெல்லையப்பர் மூலம் லோகோபகாரி வார இதழில் உதவி ஆசிரியராக அறிமுகமானர். தேசபந்து, திராவிடன், தமிழ்நாடு போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார். 1932 ”ஆனந்த போதினி” என்ற இதழின் ஆசிரியரானார். அந்த இதழில்தான் "அழகாம்பிகை' என்ற சிறுகதையை எழுதினார். அதுவே அவருடைய முதல் சிறுகதை என்று கூறலாம். 1934 ஆம் ஆண்டு ”பிரசண்ட விகடன்” ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார். 32 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.
நாவலாசிரியராக அறிமுகம்
[தொகு]இதழாசிரியராக இருந்ததால் பல்வேறு பகுதிகளை எழுதும்போது வெவ்வேறு புனைப் பெயர்களை அமைத்துக்கொள்ள நேர்ந்தது. தான் ஆசிரியராக இருந்த ஆனந்த போதினி, பிரசண்ட விகடன் மாத, மாதமிருமுறை இதழ்களில், மைவண்ணன், வேள், துலாம், தராசு, திருமயிலைக் கவிராயர், துரை, லியோ எனப் பல்வேறு புனைப் பெயர்களில் கதை, தொடர்கதை, அரசியல் தலையங்கம், விமர்சனங்கள், விவாதங்கள், நாடகங்கள் எழுதினார். அவ்வாறு எழுதும்போது பல்வேறு பெயர்களைச் சூட்டிக் கொண்டாலும் "ஜீவா” என்ற பெயர்தான் வாசகர்கள், எழுத்தாளர்களிடையே அன்று பிரபலமானது.
சமூகப் பணி
[தொகு]இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் உரிமைக்கும் போராடியவர். பாரதியார் பாடல்களுக்குத் தனியொருவர் உரிமை கொண்டாடுவது சரியல்ல, அவை நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று உரிமைக்குரல் எழுந்தது. அதற்காக பாரதி விடுதலைக் கழகம் என்ற அமைப்பில் இவர் தலைவராக இருந்தார். 1949-இல் மகாகவி பாரதியார் இலக்கியங்களை நாட்டுடைமையாக்கப் போராட ஏற்பட்ட குழுவில் முக்கிய பங்குவகித்து வெற்றி பெற்றார். அதற்கென ஏற்பட்ட குழுவினர் சார்பில் பாரதியின் துணைவியார் செல்லம்மாளை திருநெல்வேலிக்குச் சென்று, கண்டு, ஒப்புதல் கடிதம் வாங்கினார்.
பொறுப்புகள்
[தொகு]- தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம்
- செயலாளர், கம்பர் கழகம், சென்னை
- தலைவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
- துணைத்தலைவர், தென்னிந்திய பத்திரிகையாளர் பெருமன்றம்
- தலைவர், தமிழ்க் கவிஞர் மன்றம்
படைப்புகள்
[தொகு]பதினைந்துக்கும் மேற்பட்ட புதினங்கள், கதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள், மொழிபெயர்ப்புகள் உட்பட 130ற்கும் மேல் நூல்களை இவர் எழுதியுள்ளார். இவரது நூல்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
- புதுமைப்பெண்; அருணோதயம், சென்னை.
- வள்ளலார் (நாடகம்)
- அருட்கவி அமுதம் (பக்திப்பாடல் தொகுப்பு)
- திருவருட்பா பற்றிய நூல்
- உயிரோவியம் (புதினம்)
- உயிரோவியம் (நாடகம்)
- நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்? (புதினம்
- தாசி ரமணி (தேவதாசிகள் என்ற இழுக்கை சமூகத்தில் இருந்து களைய வேண்டும் என்ற கிளர்ச்சி நாட்டில் பரவிய காலத்தில் எழுதப்பட்ட புதினம்)
- தீண்டாதார் யார்? (நாடகம்)
- காதலனா? காதகனா? (மாணவர் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டும் புதினம்)
- இலட்சிய புருடன்
- வேலைக்காரி
- நடுத்தெரு நாராயணன்
மேற்கோள்
[தொகு]- முதுபெரும் எழுத்தாளர் - நாரண துரைக்கண்ணன், கலைமாமணி விக்கிரமன், தினமணி, மே 23, 2010
வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழகம்.வலை தளத்தில் நாரண. துரைக்கண்ணன் நூல்கள் பரணிடப்பட்டது 2013-06-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ பெருந்தலைவர் காமராசர்; அரு.சங்கர்; மணிவாசகர் பதிப்பகம்;பக்கம் 92-96