தேடிய தேட்டம்
தேடிய தேட்டம் என்பது ஒருவர் தானாகத் தேடிக்கொண்ட சொத்து எனப் பொருள்படும்.[1] பொதுவாக, இது முன்னோரிடம் இருந்து கிடைக்கும் பரம்பரைச் சொத்துக்கள் அன்றி ஒருவர் தனது வாழ்க்கைக் காலத்தில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மூலம் உருவாக்கிக் கொள்ளும் செல்வத்தைக் குறிக்கும்.
சொற்பிறப்பு
[தொகு]தேடியதேட்டம் என்னும் சொல், தேடிய, தேட்டம் என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் ஆனது. தேடிய என்பது தேடு என்ற வினையின் பெயரெச்சம். இங்கே தேடுதல் என்பது, சம்பாதித்தல் எனப் பொருள்படுகின்றது.[2] தேட்டம் என்பதும் தேடு என்பதில் இருந்து தோன்றியதே. இங்கே தேட்டம் என்பது "சேகரிக்கப்பட்ட பொருள்" அல்லது "பெற்றுக்கொண்ட பொருள்" ஆகும்.[3] எனவே தேடியதேட்டம் என்பது சம்பாதித்துச் சேகரித்த பொருளைக் குறிக்கிறது. "தேடாத்தேட்டம்" என்னும் சொல்லுக்கு தீயவழியால் சம்பாதிக்கப்பட்ட பொருள் எனச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி பொருள் தருகிறது.[4] எனவே தேடியதேட்டம் என்பது நல்ல வழியில் சம்பாதித்த பொருளைக் குறிப்பதாகக் கொள்ள முடியும். இச்சொல்லில் வரும் பொருளிலேயே தேடு, தேட்டம் ஆகிய சொற்கள் மிகப் பழைய காலத்தில் இருந்தே தமிழில் வழக்கில் இருந்து வருகின்றன. தேடியதேட்டம் என்னும் சொற்பயன்பாடு பிற்காலத்ததே.
தேசவழமையும் தேடியதேட்டமும்
[தொகு]இலங்கை வடமாகாணத்தின் மரபுவழிச் சட்டமான தேசவழமையில், சொத்துரிமை தொடர்பில், தேடியதேட்டம் என்பது ஒரு முக்கியமான கருத்துருவாக உள்ளது. தேசவழமை, ஒரு ஆணும் பெண்ணும் மணமுடித்து இணைந்து வாழும் குடும்பத்துக்கு உரிய சொத்துக்களை மூன்று வகையாக இனம் காணுகிறது. இவற்றுள், திருமணத்தின் பின்னர் இருவரும் இணைந்து வாழும்போது சம்பாதித்த சொத்து தேடியதேட்டம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆண் கொண்டுவரும் சொத்தான முதுசொம், பெண் கொண்டுவரும் சீதனம் என்பன ஏனைய இரண்டு வகையான சொத்துக்கள். தேசவழமையின்படி, முதுசொம் ஆண் பிள்ளைகளுக்கும், சீதனம் பெண் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் அதேவேளை, தேடியதேட்டம் இரு பாலாருக்கும் பகிர்ந்து அளிக்கப்படக்கூடியதாக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் தேடியதேட்டம் என்பதற்கான பதிவு.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் தேடு-தல் என்பதற்கான பதிவு.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் தேட்டம் என்பதற்கான பதிவு.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் தேடாத்தேட்டம் என்பதற்கான பதிவு[தொடர்பிழந்த இணைப்பு]