உள்ளடக்கத்துக்குச் செல்

தீர்த்தகிரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டி. என். தீர்த்தகிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தீர்த்தகிரி முதலியார்
டி. என். தீர்த்தகிரி முதலியார்
பிறப்புநவம்பர் 4, 1880
அன்னசாகரம், தர்மபுரி, தமிழ்நாடு
இறப்புமார்ச்சு 13, 1953(1953-03-13) (அகவை 66)
அன்னசாகரம், தர்மபுரி
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தீர்த்தகிரி முதலியார், தீர்த்தகிரியார், எம்டன்
அறியப்படுவதுஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்
பெற்றோர்நாராயண முதலியார்
Notes
இந்த புகைப்படம் தீர்த்தகிரியார், முன்னாள் பொதுவுடமை கட்சித் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்டது (எடுக்கப்பட்ட வருடம் அறியப்படவில்லை).

தீர்த்தகிரி முதலியார் அல்லது டி. என். தீர்த்தகிரி முதலியார் அல்லது தீர்த்தகிரியார் (D. N. Theerthagiri Mudaliar, 1880 (அரசுக் கோப்புகளில்: 1886) – 1953) தர்மபுரியைச் சார்ந்த விடுதலை போராட்ட வீரர். இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு, உப்பு சத்தியாகிரகம், நீல் சிலையை அகற்றும் போராட்டங்களின்போது பல்வேறு கட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார்[1][2][3][4]. இவர் தருமபுரி மாவட்டத்துடன் பிரிக்கப்படாத சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார்[5][6].

பிறப்பு

[தொகு]

தீர்த்தகிரியார் தர்மபுரியை அடுத்த அன்னசாகரத்தில் நவம்பர் 4, 1880 (அரசு குறிப்பு: 1886) அன்று தர்மராஜா கோவில் பரம்பரை தர்மகர்த்தாவான நாராயண முதலியாரின் மகனாகப் பிறந்தார் [1]. தீர்த்தகிரியார் அதிகம் படித்தவர் அல்லர் ஆனாலும் அவர் ஒரு சித்த வைத்தியர் மற்றும் இலக்கியவாதி [5].

சுதந்திர போராட்டம்

[தொகு]

ஆரம்பகாலம்

[தொகு]

இந்திய சுதந்திரப் போராட்டம் மகாத்மா காந்தியின் செல்வாக்கு காரணமாக அகிம்சை வழியில் செல்வதற்கு முற்பட்ட காலத்தில் துப்பாக்கியும், குண்டும் ஏந்தி வன்முறையால் ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்ற கருத்து கொண்டவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. தீர்த்தகிரியார் 20ம் நூற்றாண்டில் துவக்கத்தில் புரட்சி வழியில் செயல்பட்ட தலைவர்களான வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வாஞ்சிநாதன் ஆகியோரது அணியில் அவர்களின் தோழராக இருந்தார்.[5] ஆஷ் துரையின் படுகொலையாளியைத் தேர்வு செய்ய சீட்டு குலுக்கிப் போடப்பட்ட பெயர்களில் தீர்த்தாகிரியாரின் பெயரும் ஒன்று. ஆனால் அதில் வாஞ்சிநாதன் தேர்வாகி ஆஷைச் சுட்டுக் கொன்றார்.[1] தீர்த்தகிரியார் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். அதனால் முதலில் சுதந்திரம் நமது பிறப்புரிமையென்று குரல்கொடுத்த பாலகங்காதர திலகரைப் பின்பற்றினார். ஆயினும் மகாத்மா காந்தியின் அகிம்சை நெறியே அரசியல் வழக்கானபோது அதனை ஏற்று காங்கிரசு தொண்டராக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.[1] சேலம் விஜயராகவ ஆச்சாரியாரால் விடுதலை இயக்கத்துக்கு ஈர்க்கப்பட்டவர்களுள் ஒருவரான டி. என். கந்தசாமி குப்தாவினைத் தனது அரசியல் குருவாக தீர்த்தகிரியார் குறிப்பிட்டுள்ளார்.[1]

நீல் சிலை அகற்றம்

[தொகு]

ஊரெங்கும் பிளேக் நோய் பரவியதால் தீர்த்தகிரி அன்னசாகரத்தை விட்டு குடியாத்தம் சென்று ஓராண்டு தங்கினார். அப்போது அவர் சென்னையில் மருத்துவ சாலை (கருணை பிரவாக நிதிவைத்திய சாலை, லிங்கி செட்டித் தெரு) நடத்தினார். அக்காலகட்டத்தில், சென்னை மவுண்ட் ரோட்டில் (அண்ணா சாலை) இருந்த கர்னல் நீல் சிலையை 1927-1928ல் எஸ். என். சோமையாஜுலு தலைமையில் அகற்ற காங்கிரசார் முடிவு செய்தனர். அதன்படி, நாலைந்து நாட்கள் அச்சிலையை உளியால் சிறுகச், சிறுக உடைத்து வந்தனர். அதிகாரிகளும் சிலை பழுது பார்க்கும் வேலை நடக்கிறதென்று போய்விட்டனர். ஒரு நாள், மகாத்மா காந்தி வாழ்கவென கோஷமிட்ட பிறகு சிலை சேதமடைந்திருப்பதைக் கவனித்த பிரித்தானிய அதிகாரிகள் காங்கிரசு தொண்டர்களைக் கைது செய்தனர். அவர்களுள் தீர்த்தகிரியும் ஒருவர்.[1][3].

சிறைவாசம்

[தொகு]

கண்ணனூர் மற்றும் திருச்சி சிறையில் இருந்தபோது தான் சுப்ரமணிய சிவா அவர்களுடனான நட்பு வலுப்பெற்றது. இவரின் துணிச்சலைக் கண்ட சுப்ரமணிய சிவா இவருக்கு ’எம்டன்’ என்று பெயரிட்டார். சிவா அவர்கள் சிறையிலிருந்து தன் சொந்த ஊரான வத்தலகுண்டு செல்லாமல் தீர்த்தகிரியாருடன் தர்மபுரிக்கு அருகிலுள்ள பாப்பாரப்பட்டி சென்று தன் இறுதி காலத்தை அங்கேயே கழித்தார். இதற்கு தீர்த்தகிரி முதலியாரும் அவரது சகலை சின்னமுத்து முதலியாரும் சுப்ரமணிய சிவா மீது காட்டிய அன்பே காரணம்.[1] இவர் சிறையில் சுப்பிரமணிய சிவாவுடன் செக்கிழுத்தார்.[4] சிறையிலிருக்கும் போது தடை செய்யப்பட்டிருந்த ”பாணபுரத்து வீரன்” எனும் நாடகத்தைச் சிறைச்சாலையிலேயே நடித்துக்காட்டினார்.[1]

பொது வாழ்க்கை

[தொகு]
  • காமராசர், வ. உ. சிதம்பரனார், திரு.வி.க., கிருபானந்த வாரியார், சுப்ரமணிய சிவா, முத்துராமலிங்கத் தேவர், என். ஜி. ரங்கா, சாது சீனிவாசமூர்த்தி போன்றவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.[1][2]
  • 1930-1931-ல் கள்ளுக்கடை மறியலை தருமபுரியில் தலைமையேற்று நடத்தினார் [3].
  • 1936-ல் திரிபுரா காங்கிரஸில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தேர்தலில் காந்தியடிகளின் ஆதரவு பெற்ற பட்டாபி சீதாராமையாவுக்கு எதிராக ராஜாஜியிடம் சொல்லிவிட்டே சுபாஸ் சந்திரபோஸுக்கு ஓட்டளித்தார்.
  • தீர்த்தகிரியார் அவர்கள் சிலகாலம் பாரதியாருடன் தலைமறைவாகவும், சிலகாலம் நாடு கடத்தப்பட்டும் பாண்டிச்சேரியில் இருந்தார்.[3][4].
  • விடுதலை போராட்டங்கள் பலவற்றிலும் தனக்கு வாய்த்த மெய்த்தொண்டராக அருஞ்சகாவாக, தியாகச்சுடராக தீர்த்தகிரியார் திகழ்ந்தாரென தமிழ்நாடு சுதந்திரப்போராட்ட வீரர்கள் சங்கத்தலைவர் டாக்டர் எம். சோமயாஜிலு கூறியுள்ளார்.[1]

விவேகானந்தர், காந்தி, நேரு

[தொகு]

மக்களின் விடுதலை போராட்டத்தை ஊக்குவிக்க தீர்த்தகிரியார் 1901-ல் சுவாமி விவேகானந்தரையும் [3], 1921-ல் காந்தியையும்[2][3], 1937-ல் நேருவையும் [2] தர்மபுரிக்கு வரவழைத்தார்.

சுதந்திர போராட்டத் தொண்டர் படை

[தொகு]

சிறைக்கு வெளியே வாழ்ந்த காலத்தில் தீர்த்தகிரியார் சுதந்திர போராட்டத்தை விரிவுபடுத்துவதில் ஆழ்ந்த அக்கறை காட்டினார். சுதந்திர போராட்டத்தைப் பரப்ப நாடகம் சிறந்த உத்தியாகயிருந்தது. இவர் பலமுறை வள்ளித் திருமணம், கோவலன், சதாரம் போன்ற நாடகங்களைத் தானே எழுதியும், நடித்தும் அரங்கேற்றியவர். நாடகத்தினிடையே சுதந்திரப் போர் கருத்துக்களைத் தக்கவாறு வெளிப்படுத்துவார். சுதந்திரப் போராட்டம் பற்றி துண்டு பிரசுரங்களை ஊரெங்கும் வழங்குவார். விடுதலை போராட்ட செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்ட காலமென்பதால் போராட்ட செய்திகளைக் கையெழுத்து பிரதிகளாக்கி வெளியிடுவது அவசியமான பணியாகயிருந்தது. அந்த சமயத்தில் கடலூரைச் சார்ந்த அஞ்சலை – முருகப் படையாச்சி தம்பதியினர் செய்திகளை ஊர் ஊராகச் சென்று சேகரிப்பதும், வெளியிடுவதுமாக இருந்தனர். அவர்களோடு சேர்ந்து தீர்த்தகிரியாரும் ஊரெங்கும் வழங்கி வந்தார். சுதந்திர போருக்கு இளைஞர்களை ஆயத்தப்படுத்தியும், தொண்டரணியைத் திரட்டியும் பணியாற்றிய இவரின் வழிகாட்டுதலில் தருமபுரி மாவட்டத்தில் தொண்டர்கள் பலர் உருவாயினர். தீர்த்தகிரியாரின் மாப்பிள்ளை எம். எஸ். ஐயம்பெருமாள், முன்னாள் ஜனதா தளத் தலைவர் ஜி. ஏ. வடிவேலு, டாக்டர். தெய்வம் போன்றவர்கள் தீர்த்தகிரியின் தலைமையில் செயல்பட்டவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள்[1].

செங்குந்தர் பள்ளி

[தொகு]

எல்லோரும் கல்வியறிவு பெற வேண்டுமென்ற ஆர்வமே இவரை தர்மபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள செங்குந்தர் பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டச் செய்தது. அப்பள்ளிக்குக் கட்டிடம் கட்டித் தந்ததில் தீர்த்தகிரியாரின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.[1][2][3]

பாரதிபுரம்

[தொகு]

1946-ஆம் ஆண்டு தர்மபுரி பகுதியில் ஏற்பட்ட பெருமழை காரணமாக அன்னசாகரம் ஏரி உடைந்து பெருவாரியான மக்கள் வீடிழந்து தவித்தனர். அந்த சமயத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தீர்த்தகிரியாரின் பெருமுயற்சியால் உருவானதுதான் தர்மபுரியை அடுத்துள்ள பாரதிபுரம்[7].

சித்த வைத்தியம்

[தொகு]

தன் குடும்ப வாழ்விற்குத் தேவையான பணத்தை தான் அறிந்த நாட்டு மருத்துவத்தின் மூலமே ஈட்டினார். பற்பொடி, தலைவலி மருந்து, லேகியங்கள் தயாரித்தார். தான் தயாரித்த சித்த பல்பொடிக்கு தேச பக்தர் சித்ரஞ்சன் பெயரில் சித்ரஞ்சன் பல்பொடி என்றும், தலைவலி மருந்துக்கு சித்ரஞ்சன் பாம் என்றும் பெயரிட்டார் [3]. ஆயுர்வேத மருத்துவத்தில் இருந்த திறமையை சுப்பிரமணிய சிவாவின் அறிவுரையால் விரிவுபடுத்திக் கொண்டார் [1]. சிறை வாழ்க்கையின் போது நூற்றுக்கணக்கான போராட்ட வீரர்களின் வயிற்றுக்கடுப்பு நோயை ஆங்கில மருத்துவம் பலன் தராததால் சிறை அதிகாரியின் வேண்டுகோளின்படி குணமாக்கினார் [3]. 1942-ல் அலிபுரம் சிறையில் இருந்த போது சிறை கண்காணிப்பாளர் குடும்பத்திற்குக் கூட மருத்துவம் செய்து குணமாக்கினார் [3].

நெசவுத் தொழில்

[தொகு]

நெசவுத்தொழிலில் ஆரம்பம் முதல் ஈடுபாடும், அனுபவமும் கொண்ட இவர் தர்மபுரியில் உள்ள நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை 12.01.1938-ல் நிறுவினார் [3].

பொறுப்பு/பதவி

[தொகு]
  • சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராகவும்[1],
  • தர்மபுரி தாலுக்கா காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும்[3],
  • தமிழ்நாடு கைத்தறி சங்க துணைத் தலைவராகவும்[1],
  • ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும்[1],
  • 1947-ல் தர்மபுரியில் மாவட்ட சித்த வைத்திய சங்கம் நிறுவி அதன் தலைவராகவும்[3],
  • சென்னை மாநில சித்த வைத்திய சங்கத்தின் கமிட்டி உறுப்பினராகவும்[3] விளங்கினார்.

தியாகம், மறைவு

[தொகு]

1928-ம் ஆண்டு டாக்டர் அன்சாரி தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு கயிற்றுக் கட்டில்கள் வாங்கி அனுப்பியதில் இவருக்கு பெருத்த பொருள் இழப்பு ஏற்பட்டது. ஆயினும் அதற்காக வருந்தவில்லை [1]. தருமபுரியின் வளர்ச்சிக்காக பாடுப்பட்டது மட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த நிலத்தை பேருந்து நிலையம் மற்றும் பூங்கா அமைக்க தானம் கொடுத்தார் [8][9]. நாட்டின் விடுதலைக்காகவே தமது உடல், உழைப்பு, உயிர் அனைத்தையும் அளித்து தான் பெரிய நிலச்சுவான்தாராய் இருந்தும் தன் சொத்துகளை எல்லாம் நாட்டின் விடுதலை சேவைக்காக செலவு செய்து இவர் 03.03.1953-ல் ஏழ்மையிலேயே இறந்தார் [1][3].

நினைவுச் சின்னங்கள்

[தொகு]
  • தர்மபுரி நெசவாளர் காலனியிலும், தர்மபுரியை அடுத்த அன்னசாகரத்திலும் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.[1][3]
  • தர்மபுரியையடுத்த அன்னசாகரத்தில் ஒரு தெருவுக்கும், சேலம் அம்மாபேட்டையிலும், தர்மபுரி குமாரசாமிபேட்டையிலும் தலா ஒரு சாலைக்கு தியாகி தீர்த்தகிரியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[1][3].
  • தியாகி. தீர்த்தகிரியாரின் நூற்றாண்டு விழாவில் (05.10.1985-அன்று) முன்னாள் இந்திய குடியரசு தலைவர் மேதகு. ஆர். வெங்கட்ராமன் அவர்கள் தர்மபுரி நெசவாளர் காலனியில் திறந்துவைத்த தீர்த்தகிரியாரின் உருவச்சிலை
    தியாகி. தீர்த்தகிரியாரின் நூற்றாண்டு விழாவில் (05.10.1985-அன்று) முன்னாள் இந்திய குடியரசு தலைவர் மேதகு. ஆர். வெங்கட்ராமன் அவர்கள் தர்மபுரி நெசவாளர் காலனியில் திறந்துவைத்த தீர்த்தகிரியாரின் உருவச்சிலை.
    தர்மபுரி நகரின் தற்போதைய நகர பேருந்து நிலையம் தியாகி தீர்த்தகிரியார் திடலாக விளங்கியது. இந்நிலையில் நகர பேருந்து நிலையத்திற்கு தியாகி தீர்த்தகிரியார் பெயர் வைக்க நகர மன்றம் முடிவு செய்துள்ளது.[1][2][3]. மேலும், தருமபுரி பேருந்து நிலையத்தில் தீர்த்தகிரியார் சிலை அமைக்க 02.07.2017-ன்று தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) செயற்குழுவில்  வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது [1][தொடர்பிழந்த இணைப்பு][2].
  • தர்மபுரியை அடுத்த அன்னசாகரத்தில் தியாகி தீர்த்தகிரியாரின் நினைவகம் உள்ளது.
  • 1977-ல் தர்மபுரி பாரதிபுரத்தில் 'தியாகி தீர்த்தகிரியார் தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி & விற்பனைச் சங்கம்' தொடங்கப்பட்டது.
2005-ல் திரு. இளங்கோவன் (முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்) மற்றும் நல்லகண்ணு (முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர்) திறந்து வாய்த்த நினைவாலயம்.

நூற்றாண்டு விழா மற்றும் சிலை திறப்புவிழா

[தொகு]

தியாகி தீர்த்தகிரியார் நூற்றாண்டு விழா தர்மபுரி நெசவாளர் காலனியில், சுப்ரமணிய சிவா அரங்கில் 05.10.1985 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.[3][6] நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தகிரியார் சிலை திறப்பு விழாவிற்கு கேரள ஆளுநர் பா. இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தீர்த்தகிரியார் சிலையைத் திறந்து வைத்து அப்போதைய இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ரா. வெங்கட்ராமன் ஆற்றிய உரையின் சுருக்கம்:

  • ”தமிழகத்தின் பழம்பெரும் தியாகிகளில் தலைசிறந்தவராக விளங்கி எப்பொழுதெல்லாம் விடுதலை இயக்கம் நடைபெற்றதோ அப்பொழுதெல்லாம் பலன் கருதாது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் தியாகி தீர்த்தகிரியார்.
  • ”விடுதலைப் போராட்டங்களின் பொழுது பல்வேறு கட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • ”தென்னகத்தை பொறுத்தவரையில்,விடுதலை வேள்வியில் அர்ப்பணித்துக் கொண்ட ’பெருந்தலைவர்’ காமராசர், ’மூதறிஞர்’ இராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி போன்ற தலைவர்களெல்லாம் எவ்வளவோ தியாகங்களைப் புரிந்திருந்தாலும் கூட சுதந்திரத்திற்கு முன்னரே ’தியாகி’ என்ற பட்டத்தைப் பெற்றவர் தீர்த்தகிரியார்.”
  • ”சுதந்திரத்திற்கு பின்னர் கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்தில் அகில இந்திய அளவில் முக்கிய பங்கு வகித்தார்.
  • ஒரு முறை பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்தபோது தருமபுரி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நிற்கச் சொல்லி வற்புறுத்தியபோது தனக்கு எப்பதவியும் தேவையில்லையென வெறுத்துரைத்த மகத்தான தியாகிதான் தீர்த்தகிரியார்.”

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 த. ஸ்டாலின் குணசேகரன். விடுதலை வேள்வியில் தமிழகம் (பாகம்-1). நிவேதிதா பதிப்பகம் (ஈரோடு), 2000.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 தருமபுரி ‘எம்டன்.’ தினமணி. (வேலூர் பதிப்பு), 15.08.2007.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 3.21 3.22 3.23 ‘தியாகசீலர்’ தீர்த்தகிரியார் நூற்றாண்டு விழா மலர். சுபம் அச்சகம். (தர்மபுரி), 1985.
  4. 4.0 4.1 4.2 நெறியாளர், தமிழ்நாடு அரசாங்க செய்தித்துறை வெளியீடு. சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டம் உதயமான காலை 18.11.1966
  5. 5.0 5.1 5.2 G. A. வடிவேலு - "மாமனிதர் தீர்த்தகிரி முதலியார்". தியாகி. தீர்த்தகிரியார் நூற்றாண்டு விழா மலர். சுபம் அச்சகம். (தர்மபுரி), 1985.
  6. 6.0 6.1 தியாகி. தீர்த்தகிரியார் சிலை திறந்து வைத்து முன்னாள் துணை ஜனாதிபதி ரா. வெங்கட்ராமன் சூட்டிய புகழாரம். தமிழரசு, 01.11.1985.
  7. சுட்டி விகடன், தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #3 - தருமபுரி 200 இன்ஃபோ புக் (16.09.2018) https://www.vikatan.com/news/miscellaneous/144195-tamil-nadu-info-special-dharmapuri
  8. தினமலர், 03 ஜூலை 2017
  9. தினமணி (தருமபுரி பதிப்பு), 04 ஜூலை 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்த்தகிரியார்&oldid=3943845" இலிருந்து மீள்விக்கப்பட்டது