உள்ளடக்கத்துக்குச் செல்

கோ. நடேசய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கே. நடேச ஐயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோ. நடேச ஐயர்
இலங்கை அரசாங்க சபையின் அட்டன் உறுப்பினர்
பதவியில்
19361947
இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர்
பதவியில்
19241931
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தோதண்டராம நடேச ஐயர்

(1887-01-14)14 சனவரி 1887
தஞ்சாவூர், தமிழ்நாடு
இறப்பு7 நவம்பர் 1947(1947-11-07) (அகவை 60)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
துணைவர்மீனாட்சியம்மாள் நடேசய்யர்
வேலைவழக்கறிஞர்
தொழில்அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி

கோதண்டராம நடேசய்யர் (K. Natesa Iyer, 14 சனவரி 1887 - 7 நவம்பர் 1947) தமிழகத்தில் பிறந்து இலங்கையின் மலையத்தில் குடியேறிய தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர். 1924 முதல் இலங்கை சட்டசபையிலும், பின்னர் இலங்கை அரசாங்க சபையிலும் உறுப்பினராக இருந்தவர். ஒற்றன் என்ற புதினத்தை 1915 இல் எழுதி வெளியிட்டார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

நடேசையர் 1887 ஆம் ஆண்டு தமிழகத்தில் கோதண்டராம ஐயருக்கும் பகீரதம்மாளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தார். தஞ்சை மண்ணிலேயே வளர்ந்த நடேசையர், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஆற்றல் மிக்க புலமையுடையவர். திரு. வி.க. கல்லூரியில் கல்வி பயின்றவர். 1910-ஆம் ஆண்டிலேயே வங்கி நிர்வாகம், எண்ணெய் பொறிமுறை, காப்புறுதி ஆகிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக வர்த்தகத்தில் தமிழர்களும் தடம் பதிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், 1914-இல் வணிகர்களுக்காக வர்த்தக மித்திரன் என்ற பத்திரிகையை மாதமிருமுறையும், பின்னர் வாரமொரு முறையும் நடத்தினார். ஒற்றன் என்ற புதினத்தையும் எழுதினார்.[1]

இலங்கைக்கு இடம்பெயர்வு

[தொகு]

தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கங்களை உருவாக்கினார். அச்சங்கத்தின் கிளை ஒன்றைத் தோற்றுவிக்க இலங்கைத் தலைநகர் கொழும்புக்குச் சென்றவர், அங்கே மலைநாட்டில் இந்தியத் தமிழர்கள் அடிமைகளாகத் தேயிலைச் செடிகளோடு சேர்ந்து நடப்பட்டிருப்பதைக் கண்டு மனம் கொதித்து, இலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கினார்.

யாருமே நுழைய முடியாத "மலையகத் தோட்டங்களில்" ஒரு புடவை வியாபாரியாக வேடமிட்டுச் சென்று, தோட்டப்புறத் தமிழர்களைச் சந்தித்தார். மலையகத் தமிழர்களின் மோசமான வாழ்க்கைச் சூழலுக்குக் காரணம், கல்வியறிவின்மையும், விழிப்புணர்வின்மையுமே என்பதைக் கண்கூடாக நடேசய்யர் கண்டார். தோட்டப்புறத் துரைமார்களிடமும், கங்காணிகளிடமும் சிக்குண்டு, துன்பத்தில் கிடந்த தமிழர்களின் அகக்கண்களைத் திறக்கவும் அவர் சூளுரைத்தார்.

தேசநேசன் இதழ் வெளியிடல்

[தொகு]

1921-ஆம் ஆண்டு தேசநேசன் என்ற நாளிதழைத் தொடங்கினார். நடேசய்யரின் "தேசநேசன்" இதழே, இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ். இந்தியத் தொழிலாளர்களின் துயரத்தை முதன்முதலாக ஆய்வு செய்து வெளியிட்ட சிறப்பு தேசநேசன் இதழுக்கு உண்டு. தோட்டப்புறத் தமிழர்களின் துன்ப வாழ்க்கையையும், அவர்களை அடிமைப்படுத்திய கரங்களையும் தேசநேசன் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டிய நடேசய்யர், கொழும்பு நகரில் வாழ்ந்த இந்தியத் தமிழர்களின் வேதனைகளை விவரிப்பதற்காகவே, தி சிட்டிசன் என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார். நடேசய்யரின் பத்திரிகை எழுத்துகளும், பேச்சுகளும் ஆங்கிலேய அரசைத் திணறடித்தன. இலங்கையில் இந்தியத் தொழிலாளர்களைக் காப்பாற்றும் விதமாகத் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடியும் நடேசய்யரே. இறக்குமதி செய்து வைத்திருந்த அடிமைகளை, சகமனிதர்களாக மாற்றி வந்த நடேசய்யரை நாடு கடத்திவிட அரசு பலமுறை முயற்சி செய்தது.

அரசியலில்

[தொகு]

1924-ஆம் ஆண்டு நடேசய்யர் இலங்கை சட்டசபையில் மலையகத் தமிழரின் சார்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் இலங்கை அரசாங்க சபைக்கு 1936ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அட்டன் தேர்தல் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டார். அன்று தொடங்கி, 1947-ஆம் ஆண்டு வரை சட்டமன்றத்தில் நடேசய்யரின் உரைகள் ஒலித்தன. இலங்கை இந்தியக் காங்கிரசுடன் இணைந்து செயற்பட்டார். 1947 நாடாளுமன்றத் தேர்தலில் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.

"தமிழ்த்தென்றல்" திரு.வி.க.வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நடேசையர், திரு.வி.க. வழியிலேயே 1924-ஆம் ஆண்டில், இலங்கையில், தேசபக்தன் என்ற இதழைத் தொடங்கினார். அரசியல் உலகில் மிகச் செல்வாக்குடன் இருந்த போதும், தேசபக்தனில் எழுத நடேசய்யர் தவறியதேயில்லை.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை உருவாக்குவதற்காகவே, 1930-இல் மலையகத்தின் தோட்டத்தின் அடிவாரத்தில் குடியமர்ந்தார். தோட்டங்கள் தோறும் சென்று மக்களிடையே உரையாற்றி அம்மக்களை அடிமைத் தனத்திலிருந்து தட்டியெழுப்பினார். நடேசய்யரின் இப்பெரும் பணியில் தோள் கொடுத்த பெருமை, அவரின் மனைவி மீனாட்சி அம்மையையே சாரும். தோட்டத் தொழிலாளர்களை விழிக்கச் செய்ததோடு, தமிழையும் அவர்கள் செழிக்கச் செய்தனர்.

தொழிலாளர்களுக்காக இருவரும் பாடிய "தொழிலாளர் சட்டக்கும்மி' பாடல்கள் தொழிலாளர்களின் இதயத்தில் மின்னலாகப் பதிந்து, அம்மலை முகடுகளில் எல்லாம் எதிரொலித்தன.

"தேசபக்தன்' இதழின் முகப்பில் புதிய மலையக ஆத்திசூடிப் பாக்களை எழுதி நடேசய்யர் வெளியிட்டார். மகாகவி பாரதியின் பாடல்களை இலங்கை முழுவதும் பரவச் செய்த பெருமை நடேசையரையே சாரும். தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் கங்காணிகளையும், துரைமார்களையும் கேள்விக்குள்ளாக்கிய நடேசய்யரின் பாடல்கள், அத்தொழிலாளர்களின் வாழ்க்கையைக் காட்டும் தேசியகீதமாகத் திகழ்ந்தது.

வெளியிட்ட இதழ்கள்

[தொகு]
தமிழகத்தில்
  • வர்த்தகமித்திரன் (1914)
இலங்கையில்
  • தேசநேசன் (1922-23)
  • தேசபக்தன் (1924-29)
  • தொழிலாளி (1929)
  • தோட்டத்தொழிலாளி (1947)
  • உரிமைப்போர்
  • சுதந்திரப்போர்
  • 'வீரன் சுதந்திரன்
  • சிட்டிசன் (1922)
  • ஃபார்வர்ட் (1926)
  • இந்தியன் ஒப்பினியன் (1936)
  • இந்தியன் எஸ்டேட் லேபர் (1929)

வெளியிட்ட நூல்கள்

[தொகு]
தமிழகத்தில்

வங்கி நிர்வாகம், எண்ணெய் பொறிமுறை, காப்புறுதி ஆகிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டார். ஒற்றன் என்ற புதினத்தையும் எழுதினார். இப்புதினம் இரண்டு பாகங்களையும் ஒன்பது அதிகாரங்களையும் கொண்டு 180 பக்கங்களை கொண்டிருந்தது. ஆங்கிலப் புதினம் ஒன்றின் தழுவலாக இதனை அவர் எழுதியிருந்தார்.[1]

  • கணக்குப்பதிவு நூல் (1914, தஞ்சாவூர்)[2]
  • ஒற்றன் (The spy, புதினம், 1915, தஞ்சாவூர்)
இலங்கையில்
  • வெற்றியுனதே
  • நீ மயங்குவதேன் (கட்டுரைத் தொகுப்பு, 1931)
  • இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் (1941, இரண்டாம் பதிப்பு: 2018)
  • இந்தியா இலங்கை ஒப்பந்தம் (1941)
  • தொழிலாளர் சட்டப் புத்தகம் (1942)
  • அழகிய இலங்கை (1944)
  • Indo-Ceylon Crisis (1941)
  • கதிர்காமம் (1946)
  • இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் (1947)

உள்ளிட்ட பதினான்கு நூல்களை எழுதியுள்ளார். தொழிலாளர் சட்டப்புத்தகம் என்னும் நூல் ஒவ்வொரு தொழிலாளியின் கைகளிலும் இருந்ததுடன், அவர்கள் பெற வேண்டிய உரிமையையும் பட்டியலிட்டது.

1930 இல் அட்டன் நகரில் குடியேறிய நடேசையர் அங்கு சகோதரி அச்சகத்தை தொடங்கினார். நவம்பர் 25, 1931 இல் தானெழுதிய நீ மயங்குவதேன்? என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். இவரது மனைவி மீனாட்சி அம்மையார் எழுதிய பாடல்களை இந்தியத் தொழிலாளர் துயரங்கள் எனும் தலைப்பில் இரண்டு பாகங்களாக வெளியிட்டார்.

1933 இல் புபேந்திரசிங்கள் அல்லது நரேந்திரபதியின் நரக வாழ்க்கை எனும் நூலை இரண்டு பாகங்களாக வெளியிட்டார். இந்நூல் இந்தியாவின் பாட்டியாலா மகாராஜா செய்த அக்கிரமங்களை ஆவணப்படுத்தியது. இந்நூலுக்கு இந்தியாவிற்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

நடேசையர் பதிப்பித்த நூல்கள்

[தொகு]
  • மீனாட்சி அம்மையாரின் பாடல் தொகுப்பு இந்தியத் தொழிலாளர் துயரங்கள்
  • மீனாட்சியம்மையாரின் இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை (1940)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 சரவணகுமார், பெருமாள் (08-05-2022). "தேசபக்தன் கோ. நடேசய்யரின் முதல் இலக்கிய முயற்சி "ஒற்றன்" நாவல்". வீரகேசரி: பக்: 4. 
  2. "கணக்குப்பதிவு நூல்". Archived from the original on 2021-05-08. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
தளத்தில்
கோ. நடேசய்யர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._நடேசய்யர்&oldid=3926599" இலிருந்து மீள்விக்கப்பட்டது