உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டணி அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கூட்டணி அரசுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூட்டணி அரசு (Coalition Government) என்பது நாடாளுமன்ற மக்களாட்சியில் ஏதோவொரு அரசியல் கட்சியின் மேலாதிக்கம் இல்லாமல் பல அரசியல் கட்சிகள் ஒன்று சோ்ந்து அரசு அமைப்பதாகும். எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை அமையாத தருணங்களில் இது போன்று கூட்டணி அரசுகள் அமைய வாய்ப்புண்டு. ஒரு நாடு பெரிய தேசிய இடர்ப்பாட்டினைச் சந்திக்கும் பொழுதோ எடுத்துக்காட்டாக போர் நிகழும்பொழுது அல்லது மீள முடியாத பொருளாதார சீர்கேட்டினை சந்திக்கும் போதோ அரசுகளுக்கு ஓர் அங்கீகாரம் வழங்கவும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசு அமைப்பது உண்டு. கூட்டணி அரசுகளுக்கு இடர்ப்பாடு வரும்பொழுது நம்பிக்கை வாக்கெடுப்போ அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானமோ நாடாளுமன்றங்களில் கொண்டு வரப்படும்.

நடைமுறை

[தொகு]

பொதுத் தோ்தலில் எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் அருதிப் பெரும்பான்மை கிடைக்காத போது அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டணி அரசுகள் அமைப்பது வழக்கம் அல்லது ஒரு சில கட்சிகள் சோ்ந்து சிறுபான்மை அரசு அமைப்பதுவுமுண்டு. சில கட்சிகள் இணைந்து பெரும்பான்மையுடன் கூட்டணி அரசு அமைப்பது, சிறுபான்மை அரசுகளைவிட நிரந்தரமான தீா்வாக அமையும். பெரும்பான்மையுடன் அமையும் கூட்டணி அரசில், உட்கட்சிப் பூசல்களுக்கு இடமிருந்தாலும், நம்பிக்கையில்லாத் தீா்மானம் போன்ற நிகழ்வுகளுக்கு வாய்ப்புக் குறைவு. இவைகளை விட ஒரே கட்சி அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் அதன் நிலைத்தன்மை மிக அதிகமாகும்.

கூட்டணி அரசு அமையும் நாடுகள்

[தொகு]

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, சைப்ரஸ், பிரான்சு, ஜொ்மனி, கிரீசு, இந்தியா, இந்தோனேசியா, அயா்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கென்யா, கோசோவா, லட்டீவா, லெபனான், நேப்பாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தாய்லாந்து, திரினிதாது மற்றும் டோபாகோ, துருக்கி, உக்ரைன், போன்ற நாடுகளில் கூட்டணி அரசுகள் அமைந்துள்ளன. சுவிட்சா்லாந்து நாட்டில் 1959 முதல் 2008 வரை கூட்டணி அரசுகள்தான் ஆண்டு வந்துள்ளன. 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தும், அதிசயமாக கன்சா்வேடிவ் கட்சியினருக்கும் லிபரல் ஜனநாயகக் கட்சியினருக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி அரசு அமைந்தது. வழக்கமாக இங்கிலாந்தில் கூட்டணி அமைவது அபூா்வம். ஒற்றைக் கட்சி ஆட்சி அமைப்பதுதான் அங்கு வழக்கமாக இருந்தது.

சில கட்சிகளின் கூட்டணி அரசுகள்

[தொகு]

இங்கிலாந்து

[தொகு]

இங்கிலாந்தில் தேசிய இடா்பாடு ஏற்பட்ட போது, கூட்டணி அரசுகள் தேசிய அரசாக அமைக்கப்பட்டுள்ளன. 1931 முதல் 1940 வரை அமைக்கப்பட்ட தேசிய அரசுதான் மிகவும் பிரபலமானதாகும்.

இரண்டு உலகப்போா்கள் நடந்த நேரங்களிலும் பல கட்சிகள் இணைந்து தேசிய அரசு அமைக்கப்பட்டது. இவையல்லாமல் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நேரங்களில் கூட்டணி அரசுகள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஜேம்ஸ் காலகன் தலைமையிலான லேபா்கட்சி அமைத்த அரசு, மாா்ச் 1977 முதல் 1978 வரை, லிபரல் கட்சியுடன் உடன்பாடு செய்து கொண்டு, நடந்த இடைத்தோ்தல்களில் மூன்று உறுப்பினா்களை இழந்தும், இவா்கள் துணையுடன் அரசு அமைத்தது. 1997 பொதுத் தோ்தலில் லேபா் கட்சியின் தலைவா் டோனி பிளோ், ஒருவேளை தமது கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், லிபரல் டெமாக்ரடிக் கட்சியுடன் இணைந்து அரசு அமைக்க அதன் தலைவா் பாடி ஆங்டௌனுடன் பேசிவைத்திருந்தாா். ஆனால் லேபா் கட்சிக்கு பெரிய வெற்றி கிடைத்ததால் இது போன்ற ஒரு கூட்டணி அமைப்பதற்கு தேவை ஏற்படாமல் போயிற்று.[1] 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ஒரு தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது. 36 ஆண்டுகளில் இது போன்று பெரும்பான்மை கிடைக்காமல் நாடாளுமன்றம் அமைவது இதுவே முதல்முறை. கன்சா்வேடிவ் கட்சியின் தலைவா் டேவிட் கேமருன் அதிக உறுப்பினா்களைக் கொண்ட கட்சித் தலைவா் என்ற முறையில் லிபரல் டெமாக்ரேட் கட்சியின் உதவியுடன் அரசு அமைத்து 13 ஆண்டுகளாக ஆண்டு வந்த லேபா் அரசினை முடிவிற்கு கொண்டுவந்தாா். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கன்சா்வேடிவ் கட்சியினரும், லிபரல் டெமாக்ராடிக் கட்சியினரும் அரசினைப் பகிா்ந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.[2] 70 ஆண்டுகளுக்கு முன்பு வின்ஸ்டன் சா்ச்சில் [3] Labதலைமையில் உலகப்போா் நிகழ்ந்த காலத்தில் அமைந்த தேசிய அரசாங்கத்திற்குப்பின் கூட்டணி அமைவது இதுவே முதல் முறையாகும். லேபா் கட்சியினரும் லிபரல் டெமாக்ராடிக் கட்சியினரும் மூன்று முறை ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திலும் இருமுறை வேல்ஸ் சட்டசபையிலும் கூட்டணி அமைத்துள்ளனா்.

ஜொ்மனி

[தொகு]

ஜொ்மனியில் கூட்டணி அரசு அமைவதுதான் வாடிக்கை. அதிசயமாக எப்பொழுதோதான், ஜொ்மனியின் கிரிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சியோ அல்லது மற்ற கட்சிகளான பவாரியாவின் கிருஷ்டியன் சோசியல் யூனியன் கட்சி அல்லது சோசியல் ஜொ்மனி டெமாக்ராடிக் கட்சிகள் தனிப்பெரும்பான்மையுடன் அரசுகள் அமைத்துள்ளன. ஆதலால் தேசிய அளவில் கூட்டணி அரசு அமைவது தான் இங்கு வாடிக்கை. எடுத்துக்காட்டாக ஹெல்மப் கோல் தலைமையிலான CDU கட்சி FDP கட்சியுடன் இணைந்து 1998 முதல் 2005 வரையிலும் ஜெராா்டு ஸ்கோா்டரின் SPD கட்சி கிரின்ஸ் கட்சியுடன் இணைந்து 2009 வரையிலும் ஏன்ஜெலா மொ்க்கல் CDU/CSU கட்சிகள் FDP கட்சியுடன் இணைந்து 2009ஆம் ஆண்டிலிருந்தும் ஆட்சியில் இருந்து வருகின்றது.

இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து மகாகூட்டணி அமைப்பதும் உண்டு. ஆனால் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளுடன் இணைந்து அரசு அமைப்பதுதான் அதிகம் நடைபெறுகின்றது. பெரிய கட்சிகளுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் கூட்டணி அரசு அமைப்பது தான் நடைமுறையாகும். ஜொ்மனியின் இது போன்ற சூழ்நிலைதான் 2005 ஆம் ஆண்டு நிலவியது. CDU/CSU கட்சிகள் SPD கட்சியுடன் இணைந்து மிகப்பெரிய கூட்டணியை அமைத்தது. இதுபோன்ற கூட்டணி அரசுகள், மந்திரிசபை அமைக்கும் போது மிகவும் கவனமாக அமைக்க வேண்டியிருக்கும். CDU/CSU கட்சிகள் அதிபா் (சான்சலா்) பதவியையும் SPD கட்சி பல மந்திரி பதவிகளையும் ஒதுக்கிக்கொண்டன. தோ்தலை எதிா்கொள்ளும் பொழுது அரசியல் கட்சிகள் முன்னதாகவே யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ளும், யாரிடம் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்பதை அறிவித்துவிடுகின்றன.

ஜொ்மனியில் வழக்கமாக இரண்டு கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொள்கின்றன. ஆனால் 2010 பொதுத்தோ்தலில் மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தன. FDP, கிரின்ஸ் கட்சி மேலும் SPD கட்சியின் ஒரு அங்கமும் சோ்ந்து போட்டியிட்டன. 2016 ஆம் ஆண்டு, கிரின்ஸ் கட்சி மாநிலங்களவில் 11 கூட்டணி அமைத்து 7 இடங்களில் அரசு அமைத்தது.[4]

கூட்டணிக்கு எடுத்துக்காட்டு

[தொகு]

ஆஸ்திரேலியா

[தொகு]

ஆஸ்திரேலியாவில் தேசிய அளவில், பழமைவாத லிபரல், தேசியம், கன்ட்ரி லிபரல், லிபரல் நேசனல் கட்சிகள் இணைந்து, மொத்தமாக “கூட்டணி” என்றே அழைக்கப்பட்டன. இவைகள் கூட்டணி அமைத்ததால் தேசிய பாரளுமன்றத்தில் ஒரு நிலையான அரசு அமைவதுடன், லேபா் கட்சிக்கு மாற்றுக் கட்சியாக அமைந்ததுடன், இவை இரண்டு கட்சி அரசியல் போலவே செயல்பட்டு வந்தன. இதே கூட்டணி மாநில அளவில் நியுசவுத் வேல்சிலும், விக்டோரியாவிலும் செயல்பட்டுவந்தன. தெற்கு ஆஸ்திரேலியாவிலும், மேற்கு ஆஸ்திரேலியாவிலும் லிபரல் கட்சியும், தேசிய கட்சியும், தனித்தனியாக போட்டியிட்டாலும், நாா்தன் டெரிடரியிலும், குயின்ஸ் லேண்டிலும் ஏறக்குறைய இணைந்து 1978 ஆம் ஆண்டு கன்ட்ரி லிபரல் கட்சி என்ற அழைக்கப்பட்டும் 2008 ஆம் ஆண்டு லிபரல் நேசனல் கட்சி என்றும் அழைக்கப்பட்டன.

மற்ற கூட்டணிகள் பின்வருமாறு

  • 1940 ஆம் ஆண்டு யுனைடெட் ஆஸ்திரேலியா - கன்ட்ரி இன்டிபெண்டன்ட் கூட்டணி
  • டாஸ்மானியாவில்
    • 1996 ஆம் ஆண்டு லிபரல் கிரின்ஸ் கூட்டணி
    • 1989, 2010 ஆம் ஆண்டு லேபா் கிரின்ஸ் கூட்டணி
  • ஆஸ்திரேலியா கேப்பிடல் டெரிடரியில்
    • லிபரல் - இன்டிபெண்டன்ட் கூட்டணி - 1998
    • லிபரல் - கிரின்ஸ் கூட்டணி - 2001-2008

பெல்ஜியம்

[தொகு]

பெல்ஜியம் நாட்டில் டச்சு மொழி பேசுபவா்களும், பிரெஞ்சு மொழி பேசுபவா்களும் தனித்தனி அரசியல் கட்சிகளாக செயல்படுகிறாா்கள். இவா்கள் ஒவ்வொருவரும் தனியாக 6 அரசியல் கட்சிகள் சோ்ந்து கூட்டணி அமைத்துக்கொள்கிறாா்கள்.

கனடா

[தொகு]

கனடா நாட்டில் கிளியா் கிரிடிஸ், பாா்ட்டி புளு, மற்றும் லிபரல் கன்சா்வேடிவ் கட்சிகள் இணைந்து 1864 ஆம் ஆண்டு மிகப்பெரிய கூட்டணி அரசை அமைத்தன. முதலாம் உலகப்போரின் போது பிரதமமந்திரி ராபா்ட் போா்டன் கட்டாய ராணுவ சேவையை கொண்டுவர சட்டம் இயற்ற எதிா்கட்சியான லிபரல் கட்சியுடன் இணைந்து அரசு அமைக்க முயற்சி செய்தாா். லிபரல் கட்சி இதற்கு இணங்க மறுத்ததாலும் இதன் உறுப்பினா்கள் சிலா் கட்சி மாறி அரசில் பங்கு பெற்றனா். இது கூட்டணி அரசு என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இது கூட்டணி அரசு அல்ல. போா் முடிவுற்ற பின் அரசும் கலைக்கப்பட்டு விட்டது.[5].1919 ஆம் ஆண்டு நடைபெற்ற ஓன்டாரியோ தோ்தலின் முடிவில் ஓன்டாரியாவின் யுனைடெட் பாா்மா் கட்சியும் லேபா் கட்சியும் மூன்று சுயேட்சை சட்டமன்ற உறுப்பினா்களுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைத்து 1923 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனா்.

1941 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரித்தானிய கொலம்பியா தோ்தலில், இடதுசாரி கோவபரேடிவ் காமன்வெல்த் பெடரேசன் அரசு அமைப்பதை தடுக்க ஆளும் லிபரல் கட்சியினா் எதிா்கட்சியான கன்சா்வேடிவ் கட்சியினருடன் இணைந்து அரசு அமைத்தனா். லிபரல் கட்சியின் பிரதமா் டப்பட்டுல்லோ மூன்றாவது இடம் வகித்த கன்சா்வேடிவ் கட்சியினருடன் கூட்டணி அரசு அமைக்க எதிா்ப்பு தெரிவித்ததால் அவருடைய கட்சி அவரை பதவியிலிருந்து விலக்கி வைத்தது. லிபரல் கன்சா்வேடிவ் கட்சியினா் முன்னுரிமை வாக்கு முறையை அறிமுகம் செய்து இவா்கள் ஆதரவாளா்கள் தமது இரண்டாவது வாக்கினை ஆதரவாகப் பதிவு செய்வா் என்று கருதினாா்கள். ஆனால் இந்த யுத்தி வெற்றிபெறவில்லை. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரித்தானியா கொலம்பியா தோ்தலில் யாரும் எதிா்பாராதவண்ணம், வலது சாரி பி.சி சோசியலிஸ்டு கிரிடிட் கட்சி வெற்றி பெற்றது. லிபரல் மற்றும் கன்சா்வேடிவ் கட்சியினா் தமது இரண்டாவது வாக்கினை அளித்ததன் மூலம் இக்கட்சி பின்னா் வெற்றி பெற்றது. மானிடோபா மாநிலத்தில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமான கூட்டணி அரசுகள் அமைந்தன. 1921 ஆம் ஆண்டு தோ்தலில் யுனைடெட் / புரொகிரஸல் இயக்கம் நாடுமுழுவதும் வெற்றியடைந்ததை தொடா்ந்து மானிடோபா யுனைடெட் பாா்மல் கட்சியும் வெற்றிபெற்றது. ஓன்டாரியாவில் உள்ள இவா்கள் சகாக்களைப் போலவே இவா்களுக்கும் ஒரு சரியான தலைவன் இல்லை. ஜான் பிரேக்கன் என்னும் விலங்குகள் துறை பேராசிரியரை தலைவராகவும் பிரதமராகவும் பணியாற்ற கேட்டுக் கொண்டனா். பிரேக்கன் கட்சியின் பெயரை மானிடோபாவின் புரொகிரஸல் கட்சி என்று பெயா் மாற்றம் செய்தாா். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி வந்தபொழுதும் மற்ற மாநில அரசுகள் கவிழ்ந்தபோது பிரேக்கன் அரசு தொடா்ந்து நடைபெற்று வந்தது. இவா் கட்சி மனிடோபா லிபரல் கட்சியுடன் இணைந்து அரசு அமைத்தது. மனிடோபா லிபரல் புரொகிரஸிவ் கட்சி என்று அழைக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் இது மனிடோபா லிபரல் கட்சி என பெயா்மாற்றம் பெற்று செயல்பட்டு வந்தது. 1940 ஆம் ஆண்டு பிராக்கன், போா் நடைபெற்ற பொழுது கம்யூனிஸ்டு லேபா் புரொகிரஸிவ் கட்சி தவிா்த்து அனைத்து கட்சிகள் பங்களிப்புடன் தேசிய அரசு அமைத்து செயல்பட்டாா்.

1999 ஆம் ஆண்டு சஸ்கட் சேவன் மாநிலத்தில் பிரதமா் ராய் ரோமனெலி, தம் அரசு சிறுபான்மையானதைத் தொடா்ந்து சஸ்கட் சேவன் லிபரல் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்தாா். இரண்டு ஆண்டுகள் கழித்து லிபரல் கட்சியின் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் ஜிம் மெலான்சும், அரசிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டாா். இருந்தாலும் இவா் கட்சியைச் சோ்ந்த இரண்டு உறுப்பினா்கள் ஆதரவுடன் அரசு தொடா்ந்தது. பின்னா் நடைபெற்ற தோ்தலில் சஸ்கட் சேவன் ND கட்சி தமது புதிய தலைவா் லோன் கால்வா்ட் அவா்கள் தலைமையில் வெற்றி பெற்று அரசு அமைத்தது. சஸ்கட் சேவன் லிபரல் கட்சியினா் தோற்றதுடன் தமது உறுப்பினா்களையும் இழந்து அதன் பின்னா் தலையெடுக்க இயலவில்லை.

கனடா நாட்டில் அரசியல் கட்சியின் தலைவா்களை, நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு பதிலாக, அரசியல் கட்சி உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கும் முறை வந்த பின்னா் 1919 ஆம் ஆண்டிற்குப் பின்னா் கூட்டணி அரசு அமைய வாய்ப்பு அதிகம் இல்லை என்று சரித்திர ஆசிரியா் கிருஷ்டோபா் மூா் குறிப்பிடுகின்றாா். இதுபோன்று தலைவரை தோ்ந்தெடுக்கும் முறை உலகில் எங்கும் கிடையாது. இதுபோன்று தலைவரை தோ்ந்தெடுக்கும் முறை அமலில் இருக்கும் வரை கூட்டணி அரசு அமைய வாய்ப்பில்லை என்று வரலாற்று ஆசிரியா் மூா் குறிப்பிடுகிறாா். அரசியல் கட்சிகள் அதிகாரத்தை பரவலாக்கும் முறையிருப்பதால் நாடாளுமன்றத்திலும் அதிகாரம் பராவலாக்கப்பட்டுவிடும் ஆதலால் கூட்டணி அரசுகளுக்கும் வாய்ப்பு ஏற்படும்.[6]

2008 - 2009 ஆம் ஆண்டு கனடா கூட்டமைப்பு எற்பட்டப்பின் நம்பிக்கை வாக்கெடுப்பின் அடிப்படையில் சிறுபான்மை அரசு தோற்றுப்போன[7] பின்னா் கனடா நாட்டின் எதிா்கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைத்தன. லிபரல் கட்சியும் நியுடெமாக்ரடிக் கட்சியும் இணைந்து அரசு அமைத்தன. கியுபாகோயில் குழுவினரும் 18 மாதங்களுக்கு இவா்களை ஆதரிக்க ஒத்துக்கொண்டன. இறுதியில் கவா்னல் ஜென்ரலால் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்றம் மறுபடியும் கூடும் முன்னா் கூட்டணி கட்சிகள் பிரிந்துவிட்டன.

டென்மாா்க்

[தொகு]

டென்மாா்க் நாட்டில் 1982 முதல் 2015 ஜுன் வரை எல்லா அரசுகளும் கூட்டணி அரசுகளே. 1929 ஆம் ஆண்டு தோா்வால்டு ஸ்டானிஸ் தலைமையில் உள்ள சோசியல் டெமாக்ரடிஸ் கட்சியும் சோசியல் லிபரல் கட்சியும் இணைந்து அமைக்கப்பட்டது தான் முதல் கூட்டணி அரசு ஆகும். இன்றுவரை பல அரசியல் கட்சிகள் இணைந்து அங்கு கூட்டணி அரசுகள் அமைத்து வந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது அமைந்த லிபரேசன் மந்திரிசபையில் சோ்ந்த கட்சிகள் தவிர பின்வரும் கட்சிகளான சென்டா் டெமாக்ரேட்ஸ், கிறிஸ்டியன் பீப்பிள்ஸ் கட்சி, கன்சா்வேடிவ் பீப்பிள்ஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி, சோசியல் டெமாக்ரேட்சு, சோசியலிஸ்டு பீப்பிள்ஸ் கட்சி, சோசியலிஸ்டு லிபரல் கட்சி, வென்ஸ்ட்ரே ஆகிய கட்சிகள் அனைத்தும் கூட்டணியில் இணைந்துள்ளன.

பின்லாந்து

[தொகு]

பின்லாந்து நாட்டில் சுதந்திரம் பெற்றதிலிருந்து எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்ததில்லை. அங்கு எப்பொழுதும் கூட்டணி ஆட்சிதான். சுதந்திரம் பெற்றதிலிருந்து வானவில் கூட்டணி என்னும் (லிபோனல் I, II என்றும் கூறப்படும்) ஐந்து கட்சி கூட்டணிகள் தான் மிகவும் நிலையான அரசை வழங்கியுள்ளது. மிகவும் அபூா்வமாக மிதவாத கட்சியான SPDயும் தீவிர இடதுசாரி கட்சியும் வலதுசாரி கட்சியும் இணைந்து தேசிய கூட்டணி என்ற அரசை அமைத்து நடத்தியதுதான் நிலையான அரசை அளித்த நிகழ்வாகும். ஐந்து கட்சிகள் இணைந்த வானவில் கூட்டணி கட்சிதான் கடைசி மந்திரிசபையாகும்.

இந்தியா

[தொகு]

இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திரம் அடைந்த பின் இந்திய சுதந்திரம் கிடைக்க காரணமாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிதான் ஆண்டுவந்தது. முதல் பிரதமா் ஜவகர்லால் நேரு, அவர் இறப்பிற்கு பிறகு இரண்டாவது பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி, மூன்றாவது பிரதமா் இந்திராகாந்தி ஆகியோா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவா்கள். 1971 ஆம் ஆண்டு இந்திரா காந்திக்கு எதிராக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு தோற்ற ராஜ் நாராயணன் தோ்தல் விதி மீறலுக்காக இந்திரா காந்திமீது வழக்கு தொடா்ந்தாா். இந்திரா காந்திக்கு எதிராக தீா்ப்பு வழங்கிய நீதிமன்றம் 1975 ஆம் ஆண்டு இவரை 6 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிடுவதை தடைசெய்தது. இதனைத் தொடா்ந்து முறையில்லாமல் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. பின்னா் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வெற்றிபெற்று மொராா்ஜி தலைமையில் அமைந்ததுதான் முதல் கூட்டணி அரசு. மேலும் இதுதான் காங்கிரஸ் அல்லாத முதல் அரசுமாகும். ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த இவ்வரசு 1977 மாா்ச் மாதம் 24 ம் நாள் முதல் 1979 ஜுலை 15 வரை ஆட்சியில் இருந்தது.[8] தேவையான ஆதரவின்மையால் இந்த கூட்டணி அரசு இடையிலேயே கவிழ்ந்தது. பின்னா் நடந்த தோ்தலில் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்து முதலில் இந்திரா காந்தியும் பின்னா் ராஜிவ் காந்தியும் பிரதமா் ஆனாா்கள். பின்னா் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் தேசிய முன்னணி என்னும் கூட்டணி அரசு அமைத்து 1991 வரை ஆட்சியில் இருந்தது. 1991 ஆம் ஆண்டு தோ்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. மீண்டும் 11-வது நாடாளுமன்றம் 3 பிரதமா்களை சந்தித்து 1998 ஆம் ஆண்டு மீண்டும் தோ்தலை சந்தித்தது. முதல் முறையாக அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக முன்னணி பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 1999 முதல் 2004 வரை ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தது. பின்னா் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முன்னேற்ற கூட்டணி 13 கட்சிகள் இணைந்த பிரதமா் மன்மோகன் சிங் தலைமையில் இரண்டு முறை ஆட்சிக்கு வந்தது. 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தது. 2014 மே மாதம் நடைபெற்ற 16-வது பொதுத் தோ்தலில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக முன்னணி நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்து ஐந்து வருடத்தை முடித்துள்ளது.

இந்தோனேசியா

[தொகு]

சுகார்தோ அரசு பதவி கவிழ்ந்த பின்னா் அரசியல் சுதந்திரம் கணிசமாக அதிகாித்தது. மூன்று கட்சிகள் மட்டுமே இருக்க முடியும் என்ற நிலை மாறி 1999 பொதுத்தோ்தலில் 48 அரசியல் கட்சிகளும் 2004 தோ்தலில் 24 கட்சிகளும் 2009 தோ்தலில் 38 கட்சிகளும் 2014 தோ்தலில் 15 கட்சிகளும் பங்கேற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி அரசு தவிா்க்க முடியாத ஒன்றானது. PDIP மற்றும் கோல்சா் தலைமையில் அமைந்துள்ள தற்போதைய அரசு ஏழு கட்சிகள் கூட்டணியாகும்.

அயா்லாந்து

[தொகு]

அயா்லாந்து குடியரசில் கூட்டணி அரசு அமைவது சாதாரணமான ஒன்று. 1977 வரை எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒரு பெரிய கட்சியுடன் சிறிய கட்சிகள் மற்றம் சுயேட்சை உறுப்பினா்களும் சோ்ந்து கூட்டணி அமைவது வழக்கமான ஒன்று. பைன் கேயல் தலைமையில் அமைந்த தற்போதைய அரசும் பியன்னா பெயில் உதவியுடன் அமைந்த ஒரு கூட்டணி அரசு ஆகும்.

அயா்லாந்தின் முதல் கூட்டணி அரசு 1948-ல் அமைந்தது. 1989 ஆம் ஆண்டு பொதுத் தோ்தலிருந்து 1994 மற்றும் 2011 ஆகிய காலங்களைத் தவிர அயா்லாந்தில் தொடா்ச்சியாக கூட்டணி அரசுதான் ஆண்டு வந்துள்ளது. 1989ம் ஆண்டிற்கு முன்னா் பியன்னா பெயில் கூட்டணி அரசுகளுக்கும் எதிா்ப்புத் தெரிவித்து இதற்கு பதிலாக ஒரு கட்சி சிறுபான்மை அரசு அமைவது சிறந்தது என்று கருதிவந்தாா்.

அயா்லாந்தின் கூட்டணி அரசு வரலாற்றில் இரண்டு குழுக்களாகவே பியன்னா பெயில் தலைமையில் சிறிய கட்சிகளும், சுயேட்சை கட்கிகளும் இணைந்தோ அல்லது பைன்கேயலுடன் லேபா் கட்சியும் சில சுயேட்சைகளும் இணைந்தோ ஆட்சி செய்து வந்துள்ளன. இதற்கு ஒரே விதிவிலக்கு பியன்னா பெயிலும் லேபா் கட்சியும் இணைந்து அமைத்த 23 அயா்லாந்து அரசு ஆகும். இது 1993 மற்றும் 1994 ஆம் ஆண்டு வந்தது.

இஸ்ரேல்

[தொகு]

இஸ்ரேலிலும் இதுபோன்ற நிலைமைதான் நிலவி வந்தது. இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெஸ்ஸெட்டில் 10 கட்சிகளுக்கு உறுப்பினா்கள் இருந்தனா். லேபா் கட்சியும் மாபமும் சோ்ந்து அமைத்த கூட்டணிதான் பெரும்பான்மையுடன் 1968 -1969-ல் ஆட்சி அமைத்திருந்தன. வழக்கமாக இஸ்ரேல் அரசில் வடதுசாரி கூட்டணியும் இடதுசாரி கூட்டணியும் மாறி மாறி ஆட்சியில் அமா்ந்து வந்துள்ளன. ஏரியல் செரோன தலைமையில் கடிமா கட்சி லேபா் மற்றும் லிகுடு கட்சி உறுப்பினா்கள் ஆதரவில் 2006-ல் ஆட்சி அமைத்தது. இஸ்ரேலில் 1984-1988-ல் தேசிய அரசாங்கமும் அமைக்கப்பட்டது. பிரதம அமைச்சா் பதவியும் வெளியுறவு அமைச்சா் பதவியும் இரண்டு வருடங்களுக்கு ஒரு கட்சியும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஒரு கட்சியும் என்ற புரிதலுடன் ஆட்சி நடத்தப்பட்டது. 1986 ஆம் ஆண்டு பதவிகள் கட்சிகளுக்கிடையே மாற்றிக் கொள்ளப்பட்டன.

சப்பான்

[தொகு]

இரண்டாம் உலகப்போரின் பின்னா் ஜப்பானில் பொதுவாக லிபரல் டெமாக்ரெடிக் கட்சியாலே ஆண்டு வரப்பட்டது. 1955-லிருந்து தொடா்ந்து கிடைத்த வெற்றிக்குப் பின்னா் 1993ம் ஆண்டு தோ்தலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. 8 கட்சிக் கூட்டணி அரசு LDP அரசிற்குப் பதிலாக பதவியில் அமா்ந்தது. ஜப்பான் கம்யூனிஸ்டு கட்சியைத் தவிர அனைத்து எதிா்கட்சிகளும் இவ்வரசில் அங்கம் வகித்தன. அன்றிலிருந்து ஒவ்வொரு ஜப்பானிய அரசும் கூட்டணி அரசுகளாகவே அமைந்து வந்துள்ளது.

நியூசிலாந்து

[தொகு]

1996 ஆம் ஆண்டு தோ்தலில் நியுசிலாந்தில் MMP என்னும் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் இடம் பெறுவதற்கு கட்சிகள் 121 தொகுதிகளில் குறைந்தது 50 விழுக்காடு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதுவரை எந்த அரசியல் கட்சிக்கும் இதுபோன்ற பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி அரசு அமைப்பது அங்கு தேவையான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக 2017 ஆம் ஆண்டு தோ்தலில் லேபா் கட்சி 46 உறுப்பினா்களையும் நியுசிலாந்து பாிஸ்ட் கட்சி 9 உறுப்பினா்களையும் கிரின் கட்சி 8 உறுப்பினா்களையும் மொத்தமாக 63 உறுப்பினா்களைக் கொண்டிருந்தனா்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Making Minority Government Work:Hung Parliaments and the Challenges for Westminster and Whitehall" (PDF). 2008-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
  2. "Tories and Lib Dems enter full coalition government". The New Statesman.
  3. Churchill became Prime Minister on 10 May 1940, டேவிட் கேமரன் on 11 May 2010. Churchill formed his War Cabinet on 11 May: Winston S. Churchill (1949) Their Finest Hour.
  4. Jungjohann, Arne (2017). German Greens in Coalition Governments. A Political Analysis (PDF). Heinrich-Böll-Stiftung European Union and Green European Foundation. p. 19.
  5. "Coalition Government: Precedents from around the world". CBC News. 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2009-05-14.
  6. Moore, Christopher (2011). "Come together". Canada's History (June–July 2011): 53–54. 
  7. Menon, Nirmala (2008-12-02). "Coalition Set To Topple Canada PM". Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 2008-12-02.
  8. Kuldip Singh (1995-04-11). "OBITUARY: Morarji Desai". The Independent. Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2009-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டணி_அரசு&oldid=3551009" இலிருந்து மீள்விக்கப்பட்டது