உள்ளடக்கத்துக்குச் செல்

கிருசாந்தி குமாரசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிருஷாந்தி குமாரசுவாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிருஷாந்தி குமாரசுவாமி
Krishanti Kumaraswamy
கிருஷாந்தி குமாரசுவாமி
பிறப்பு1977
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புசெப்டம்பர் 7, 1996(1996-09-07) (அகவை 18–19)
கைதடி, யாழ்ப்பாணம், இலங்கை
பணிமாணவி
சமயம்இந்து
பெற்றோர்இராசம்மா , குமாரசுவாமி

கிருசாந்தி குமாரசாமி (Krishanti Kumaraswamy, 1977 – 7 செப்டம்பர் 1996) இலங்கைத் தமிழ்ப் பெண் ஆவார். இவர் 1996 செப்டம்பர் 7 அன்று ஆறு இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.

பின்னணி

[தொகு]

கிருசாந்தி குமாரசாமி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஆவார். இவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர சோதனையில் ஏழு அதியுயர் பெறுபேறுகளைப் பெற்று உயர்தர வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். தாயார் ராசம்மா கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் பட்டப்படிப்பை முடித்தவர். யாழ்ப்பாணம் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயத்தின் உப அதிபராகப் பணியாற்றியவர். கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியை. 38 ஆண்டுகள் ஆசிரியப் பணியை ஆற்றியவர். தந்தை இ. குமாரசாமி சுகாதாரத் திணைக்களத்தில் பணியாற்றியவர், 1984 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். மூத்த சகோதரி பிரசாந்தி கொழும்பில் படித்துக் கொண்டிருந்தார். தம்பி பிரணவன் பரி. யோவான் கல்லூரி மாணவர் ஆவார். குடும்பத்துடன் கைதடியில் வசித்து வந்தனர்.[1]

நிகழ்வு

[தொகு]

1996 செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தர வேதியியல் பாட சோதனை எழுதிவிட்டு கிரிசாந்தி சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் காணாமல் போனார். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது எனும் வரவேற்பு வளைவு உள்ள இடத்தினருகிலுள்ள, கைதடி காவலரணில் முற்பகல் 11:30 மணியளவில் அவர் உயிருடன் காணப்பட்டார். அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து அவரது தாயாருக்குத் தெரிவித்தனர். கிரிசாந்தி நாடோறும் பள்ளியிலிருந்து திரும்பும் போது சோதனைச் சாவடியைக் கடப்பது வழக்கம்.[2]

இதனால் கவலையடைந்த அவரது தாய் ராசம்மா, தம்பி பிரணவன் (வயது 16), குடும்ப நண்பரும் அயலவருமான சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது-35, தென்மராட்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உதவியாளர்) ஆகியோர் கிரிசாந்தியை தேடி சோதனைச் சாவடிக்குச் சென்றனர். அவர்களும் கொல்லப்பட்டனர்.[3] பன்னாட்டு மன்னிப்பு அவை அவளுக்காக 1996 செப்டம்பர் 20 அன்று அவசர நடவடிக்கை மேல்முறையீட்டை (UA 222/96) வெளியிட்டது.

தமிழ்நெட் செய்தியின்படி, 45 நாட்களுக்குப் பின்னர், நான்கு பேரின் உடல்களும் பின்னர் இராணுவ தளத்திற்குள் கண்டெடுக்கப்பட்டன. ராசம்மாவின் சடலத்தின் கழுத்தில் முக்கால் அகலத்தில் கயிறு கட்டப்பட்டிருந்தது. கிருபாகரனின் உடலில் கயிறு இறுக்கப்பட்டிருந்ததால், கிருபாகரனும் அதே முறையில் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார். கிரிசாந்தியினதும், அவரது தம்பி பிரணவனினதும் உடல்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, கறுப்பு நிற தாள்களால் சுற்றப்பட்டிருந்தன.[4]

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கிரிசாந்தி ஐந்து இராணுவத்தினரால் கடத்தப்பட்டதாகவும், ஆறு பேர் அவரை சோதனைச் சாவடியில் வைத்து குழு பாலியல் வல்லுறவு செய்து கொன்றதாகவும் தெரியவந்தது.[5] இறுதியாக கிரிசாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்தனர்.[4] இதனை நான்கு இராணுவத்தினர் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு விசாரணை

[தொகு]

பன்னாட்டு மன்னிப்பு அவையும் அமைதிக்கான பெண்கள்[6] போன்ற மனித உரிமை அமைப்புகள், இராணுவத்தினரைக் கைது செய்து விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க ஒரு தொடர்ச்சியான பிரச்சாரத்தை ஆரம்பித்தன. பாலியல் பலாத்காரத்தில் நேரடியாக ஈடுபட்ட 6 ராணுவ வீரர்களுக்கு இலங்கை அரசின் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.[7]

கிரிசாந்தியின் பாலியல் வல்லுறவு, கொலை தொடர்பான நீதிமன்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், 15 உடல்களைக் கொண்ட செம்மணிப் புதைகுழிகள் பற்றி அரசுக்குத் தெரிவித்தார்.[8]

தொடர்பான நிகழ்வு

[தொகு]

தமிழ்நெட் செய்தியின்படி, கிரிசாந்தியின் வழக்கை அம்பலப்படுத்தப் பணியாற்றிய உள்ளூர் ஆர்வலர் ஒருவர் 2007 பிப்ரவரி 1 அன்று அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4] கிரிசாந்தியின் இறப்பு நினைவு நாள் செம்மணியிலும் யாழ்ப்பாணத்திலும் நினைவுகூரப்பட்ட போது, அவருடன் கொலை செய்யப்பட்ட அயலவரின் விதவை மனைவியும் (கொலைக்கு 6 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்து கொண்டவர்) அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.[9][10]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gang Rape of Krishanthi Kumaraswamy by Sri Lanka security forces". Tamil Nation. பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.
  2. Alexander Horstmann; Martin Saxer; Alessandro Rippa (9 April 2018). Routledge Handbook of Asian Borderlands. Taylor & Francis. pp. 479–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-42274-7. பார்க்கப்பட்ட நாள் 6 July 2021.
  3. "SUNILA ABEYSEKERA: PEACE CAMPAIGNER ON A WAR-TORN ISLAND". Collection. Archived from the original on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2007-08-11.
  4. 4.0 4.1 4.2 "Jaffna MPCS President assassinated". தமிழ்நெட். பார்க்கப்பட்ட நாள் 2007-02-02.
  5. Bureau of Democracy, Human Rights, and Labor (2002-02-23). "Country Reports on Human Rights Practices". United States Department of State. Archived from the original on 2001-06-07. பார்க்கப்பட்ட நாள் 2006-12-28.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. "Sunila Abeysekara: Peace campaign on a war torn Island". UNESCO.org. 2007-02-02.
  7. "Death sentence for Krishanthi accused". தமிழ்நெட். 1998-07-03. பார்க்கப்பட்ட நாள் 2006-12-28.
  8. "'No instructions on Chemmani' CID". BBC. 4 January 2006. http://www.bbc.co.uk/sinhala/news/story/2006/01/060104_chemmani_ag.shtml. 
  9. "Krishanthi and family remembered in Chemmani". Tamil Guardian. 9 September 2018. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
  10. "Krishanthi Kumaraswamy and family members killed in Chemmani massacre remembered in Jaffna". Tamil Guardian. 7 September 2017. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருசாந்தி_குமாரசாமி&oldid=4100489" இலிருந்து மீள்விக்கப்பட்டது