கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)
சதுரங்க விளையாட்டில், சதுரங்கப் பேராதன் அல்லது கிராண்ட்மாஸ்டர் (Grandmaster) என்ற பட்டம் அவ்விளையாட்டை ஒழுங்குபடுத்தும் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பினால் சதுரங்க விளையாட்டாளர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். உலக வாகையாளர் பட்டத்தைத் தவிர இந்த அமைப்பு வழங்கும் மிக உயரிய பட்டம் இதுவேயாகும். இந்த நிலையை எய்தியவர் தம் வாழ்நாள் முழுமையும் இப்பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். சதுரங்க குறிப்பேடுகளில் இது பொதுவாக ஜிஎம் என சுருக்கமாகக் குறிப்பிடப் படுகிறது. சில நேரங்களில் பன்னாட்டு கிராண்ட் மாஸ்டர் என்பதன் சுருக்கமாக ஐஜிஎம் எனவும், குறிப்பாக பழைய நூல்களில், பயன்படுத்தப்படுகிறது.
கிராண்ட் மாஸ்டர், பன்னாட்டு மாஸ்டர், மற்றும் பிடீ மாஸ்டர் என்பன ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை. 1978இல் நோனா கேப்ரின்டாஷ்விலி முதல் பெண் ஜிஎம்மாக பட்டம் பெற்றார். உலகப் பெண்கள் வாகையர் பட்டத்தை வென்ற இவருக்கு ஃபிடீ இந்தப் பட்டதை சிறப்பு விலக்காக அளித்தது. ஆண்களுடன் விளையாடி இந்தப் பட்டத்தை வென்ற முதல் பெண்மணி சூசன் போல்கர் ஆவார். இவர் 1991இல் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். 2000ஆம் ஆண்டிலிருந்து முதல் பத்து இடங்களில் உள்ள பெண்களில் பெரும்பாலோர் ஜிஎம் பட்டம் பெற்றவர்களாவர்.
பெண்களுக்கெனத் தனிப்பட்ட பட்டமாக பெண்கள் கிராண்ட் மாஸ்டர் (WGM) என்ற பட்டமும் ஃபிடீ மாஸ்டர் நிலைக்கும் பன்னாட்டு மாஸ்டர் நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
வரலாறு
[தொகு]சதுரங்கம் தொடர்பில் கிரான்ட்மாஸ்டர் என்னும் பயன்பாடு, 1838ம் ஆண்டில் "பெல்ஸ் லைஃப்" என்னும் விளையாட்டு வார இதழில் காணப்பட்டது. அவ்வெளியீட்டில், வில்லியம் லூயிசு என்பவரை "எமது முன்னைய கிராண்ட்மாஸ்டர்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.[1] லூயிசும் பின்னாளில் பிலிடோர் என்பவரை கிராண்ட்மாஸ்டர் எனக் குறிப்பிட்டார். இப்பெயர் வேறு சில சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.[1]
குறிப்புக்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Hooper, David; Whyld, Kenneth (1992), The Oxford Companion to Chess (2 ed.), ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், p. 156, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280049-7
வெளி இணைப்புகள்
[தொகு]- "Requirements for FIDE Titles" from the FIDE Handbook
- "World Top Chess players" FIDE