ஆர்ட்டெமிசு
ஆர்ட்டெமிசு | |
---|---|
![]() ஆர்ட்டெமிசு | |
இடம் | ஒலிம்பிய மலைச்சிகரம் |
பெற்றோர்கள் | சியுசு மற்றும் லெடோ |
சகோதரன்/சகோதரி | அப்பல்லோ, அப்ரோடிட், ஏரெசு, எர்மெசு, ஏதெனா, டயோனிசசு, எராகில்சு மற்றும் பலர் |
ஆர்ட்டெமிசு என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் சியுசு மற்றும் லெடோ ஆகியோரின் மகள் ஆவார். இவருக்கு இணையான ரோம கடவுள் டயானா. இவரது சகோதரர் கதிரவ கடவுள் அப்பல்லோ ஆவார். இவர் வேட்டை, காட்டு விலங்குகள், கன்னித்தன்மை, குழந்தைப்பிறப்பு, நிலவு ஆகியவற்றின் கடவுளாகத் திகழ்கிறார்.[1][2] இவர் பெரும்பாலும் கையில் வில் மற்றும் அம்பு ஏந்திய வேட்டைக்காரியாக சித்தரிக்கப்படுகிறார். பெண்மான் மற்றும் சைப்ரசு மரம் ஆகிய இரண்டும் இவருக்கு புனிதமானவை ஆகும்.
பிறப்பு
[தொகு]
கோயசு மற்றும் போபே என்னும் டைட்டன்களின் மகள் லெடோ. அவர் சியுசின் கருவை வயிற்றில் சுமப்பதை அறிந்து கோபம் கொள்ளும் எரா, நிலம் அல்லது தீவு ஆகிய இரண்டிலும் அவருக்குப் பிரசவம் நடக்காது என்று சாபமளிக்கிறார். ஆதலால் பிரசவ வலி ஏற்பட்ட போது லெடோ கிரேக்கம் முழுவதும் அலைந்து திரிந்தார். பிறகு அவர் நிலமும் அல்லாத தீவும் அல்லாத மிதக்கும் தீவு எனப்படும் டெலோசு தீவை அடைந்தார். அந்தத் தீவு அன்னப் பறவைகளால் சூழப்பட்டிருந்தது. இதையறிந்த எரா குழந்தைப்பிறப்பு கடவுள் எய்லெய்தியாவைக் கடத்தினார். இதனால் லெடோ ஒன்பது பகலும் ஒன்பது இரவும் பிரசவ வலியால் துடித்தார். பிறகு அப்பல்லோ, ஆர்ட்டெமிசு இருவரும் பிறந்தனர். சில கதைகளில் ஆர்ட்டெமிசு முதலில் பிறந்ததாகவும் அவர் லெடோவிற்கு பிரசவம் பார்த்த பிறகு அப்பல்லோ பிறந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆர்ட்டெமிசு குழந்தைப்பிறப்பு கடவுளாகக் கருதப்படுகிறார்.
ஆர்ட்டெமிசு மற்றும் ஓரியோன்
[தொகு]
ஆர்ட்டெமிசு கன்னித்தெய்வமாக இருந்தாலும் அழகு மிகுந்த வேட்டைக்காரன் ஓரியேன் மீது காதல் வயப்பட்டார். ஆனால் வேட்டைக்காரனான ஓரியோன் இந்த உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும் வேட்டையாடுவேன் என்று சபதம் ஏற்றார். இதனால் விலங்குகளைக் காப்பாற்ற ஆர்ட்டெமிசு மற்றும் அவர் தாய் லெடோ ஆகிய இருவரும் ஒரு பெரிய தேளை அனுப்பி ஓரியோனைக் கொன்றனர். பிறகு ஆர்ட்டெமிசு ஓரியோனை வானில் வின்மீன் கூட்டமாக அமர்த்தினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Artemis | Myths, Symbols, & Meaning". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 2021-07-06.
- ↑ Merriam-Webster's Encyclopedia of Literature. Merriam-Webster. 1995. p. 74. ISBN 9780877790426.