உள்ளடக்கத்துக்குச் செல்

இருசொற் பெயரீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அறிவியல் பெயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கரோலசு இலின்னேயசு

உயிரியலில் இருசொற் பெயரீடு (Binomial nomenclature) எவ்வாறு உயிரினங்கள் பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு உயிரினமும் இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் பேரினத்தையும், இரண்டாம் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் இனத்தையும் குறிக்கின்றன. இவை இலத்தீன் மொழிச்சொற்களாக இருப்பதால் இலத்தீன் பெயர் எனவும் அறிவியல் பெயர் எனவும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனித இனம் ஓமோ சேப்பியன்சு (Homo sapiens) என அறியப்படுகிறது. இதில் முதற்சொல் ஓமோ மனிதர் சார்ந்திருக்கும் பேரினத்தையும் இரண்டாம் சொல் இனத்தையும் குறிக்கின்றன. இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது. தற்போது அவை அச்சுக்களில் வரும்போது சாய்ந்த எழுத்துக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

தோற்றம்

[தொகு]
  • பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பல சொற்களாலான, ஒரு பெயரில் ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்கு பல சொற்பெயரிடு முறை என்று பெயர். ஒரு தாவரத்தின் அனைத்துப் பண்புகளையும் விளக்கும் வண்ணம், ஒரு தாவரத்தின் பெயர் பல சொற்களால் அமைந்திருந்தது. நீளமான பெயரொன்றை நினைவில் வைத்து கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் வந்தன. (எ.கா) "Caryophyllum saxatilis folis gramineus umbellatis corymbis" = "மலைகள் மீது வளரும் புற்களைப் போன்ற இலைகளுடைய மஞ்சரியுடையத் தாவரம்"
  • அச்சிக்கல்களைத் தவிர்க்க, 1623 ஆம் ஆண்டு, காசுபர்டு பாகின் ( Gaspard Bauhin (1560–1624)) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடல் முறைமையை அறிமுகப் படுத்தினார்.[1]
  • இம்முறையை பின்பற்றி, சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரும், மருத்துவருமான கரோலசு இலின்னேயசு (17071778) என்பவரே பெரிதும் ஒழுங்கு படுத்தினார்.[2] அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டு, நூல் ("Species Plantarum", 1753 ) ஒன்றை இயற்றினார். இம்முறையின் பயனாக அனைத்து உலக உயிரினங்களையும் இரு சொற்கள் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தலாம். தவிர நாடு, நேரம், மொழி கடந்து, உலகெங்கும் ஒரே சொற்களாகப் பயன்படுத்தப்படுவதால், பல்வேறு நாட்டினரும் குறிப்பிட்ட உயிரினத்தை அடையாளம் கண்டு கொள்வதையும், அதன் மூலம் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதையும் எளிதாக்கலாம்.

பயன்படுத்தும் விதிகள்

[தொகு]

இம்முறையை பயன்படுத்த பல்வேறு விதிமுறைகள் உள்ளன; பல புத்தகங்கள் எவ்வாறு இச்சொற்கள் அமைக்கப்பட வேண்டும் என விளக்குகின்றன. அவற்றில் சில:

  • அச்சில் எழுதும்போது, இவை சாய்வெழுத்துகளில் அச்சிடப்பட வேண்டும். எ.கா. Homo sapiens; கையில் எழுதினால், இரு சொற்களும் தனித்தனியாக அடிக்கோடிடப்பட்டிருக்க வேண்டும். எ.கா. Homo sapiens
  • இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது.
  • அறிவியல் புத்தகங்களில் இப்பெயருக்கு அடுத்து இந்த இனத்தைக் கண்டறிந்தவரின் கடைசிப் பெயர் குறிப்பிடல் வேண்டும். எடுத்துக்காட்டாக, Amaranthus retroflexus L. அல்லது Passer domesticus (L. , 1758)
  • பொதுப்பெயருடன் பாவிக்கும்போது, அறிவியல் பெயர் அடைப்புக்குறிகளுக்குள் பின்வர வேண்டும்: வீட்டுக்குருவி (Passer domesticus)

ஊடகங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Johnson, A.T.; Smith, H.A. (1972), Plant Names Simplified : Their Pronunciation Derivation & Meaning, Buckenhill, Herefordshire: Landsmans Bookshop, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-900513-04-6 {{citation}}: Unknown parameter |lastauthoramp= ignored (help), p. v
  2. Polaszek, Andrew (2009), Systema naturae 250: the Linnaean ark, CRC Press, p. 189, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-9501-2

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருசொற்_பெயரீடு&oldid=3913307" இலிருந்து மீள்விக்கப்பட்டது